தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை என 10 நாட்கள் நடைபெற்று முடிந்தது. அதே சமயம் சட்டப்பேரவையின் கூட்டம் நடைபெற்று முடிந்த நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும். இத்தகைய சூழலில் தான் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று (09.12.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது.
அப்போது, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்படி இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இதனையடுத்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தீர்மானத்தை வலியுறுத்தி பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை நேற்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் தம்பிதுரை பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை. இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக எம்.பிக்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது” என்று பதவிட்டுள்ளார்.