
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர். அதிமுக பொன்விழா ஆண்டில் பங்கேற்பதால் சட்டப்பேரவையில் கலந்துகொள்ளவில்லை எனச் சொல்லப்பட்டாலும் இதற்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கியது ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சற்று முன்பு சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். எதிர்கட்சித்தலைவராக பன்னீர்செல்வத்திற்கு பதில் உதயகுமாரை நியமிக்கக் கோரி அளித்திருந்த மனுவை அங்கீகரிக்க வலியுறுத்தியுள்ளனர் என தகவல் வெளியானது.
மேலும் சபாநாயகர் தன்னை சந்தித்த எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களிடம், “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் யார் என்பதை சட்டப்பேரவையில் அறிவிப்பேன்” என சபாநாயகர் அப்பாவு கூறினார் என்றும் தகவல் வெளியானது. இதனை அடுத்து சபாநாயகரை சந்தித்த எம்.எல்.ஏக்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சரியாக 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சர்ச்சை நீடிக்கும் நிலையில் பேரவையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அருகருகே அமர்ந்திருந்தனர்.
இதன் பின் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
அவர்களிடம் பேசிய அப்பாவு, “இதற்கு முன்பு ஜானகி அம்மாளின் பதவிப் பிரமாணத்தில் கூட இதே போலதான் பிரச்சனை செய்தீர்கள். வினாக்கள், விடைகள் நேரத்தில் இங்கு விவாதங்களை பண்ணக்கூடாது. நான் உங்களுக்கு பேசுவதற்கு நேரம் கொடுக்கிறேன். அவையின் மாண்பை கெடுக்காதீர்கள். நான் அனுமதிக்க மாட்டேன்” எனக் கூறினார்.
ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை அறிக்கையில் உண்மை வெளியாகும் என்பதால் அமளி செய்கின்றனர் என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் தர்ணாவில் ஈடுபட்ட பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.