Skip to main content

 அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான்: ஸ்டாலின்

Published on 12/03/2018 | Edited on 15/03/2018

 

mk


 அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில் கொண்ட தி.மு.கழகத்திற்கு மட்டுமே ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம்:  ‘’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கழகத்தின் ஈரோடு மண்டல மாநாட்டிற்கான இரண்டாவது அழைப்பு மடல்.

 

சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குத் தனது தங்கத் தமிழ் வரிகளால் கவிதைநடை உரை எழுதியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் புறநானூற்றுக் காட்சிகளை விவரித்திருப்பார். களத்தினில் குதிரைப் படைகள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளன. யானைப் படைகள் எந்தளவு வலிமை காட்டி வருகின்றன. தேர்ச் சக்கரங்களில் வீழ்ந்த எதிரிப் படைகளின் எண்ணிக்கை எவ்வளவு, வெற்றி முரசம் கொட்டிய சொந்த நாட்டு வீரர்கள் எப்போது திரும்பி வருவார்கள் எனப் பல நிலவரங்களும் அந்தப் பாடல்களின் வழியே தெரியவரும்.

 

அதுபோலத்தான், கொள்கைப் பட்டாளமாக ஈரோட்டில் குவிந்திடுவோம் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் விடுத்த முதல் அழைப்பு மடல் கண்டு, ஈரோடு மண்டல மாநாட்டுப் பணிகளின் ஒவ்வொரு அங்குல முன்னேற்றம் குறித்த செய்திகளும் உடனுக்குடன் வந்தவண்ணம் உள்ளன. கழக மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான மாவட்டக் கழகச் செயலாளர் சு.முத்துசாமி அவர்கள் ஒருநாளைக்கு 24 மணி நேரம் போதாது என்கிற வகையில் கடிகார முள்ளைவிட வேகமாக செயலாற்றியபடி கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு உடனுக்குடன் தகவல் அளித்தபடி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் கழகத்தின் வரவேற்புக் குழுவின் மாநாட்டுச் செயலாளர்களாக பொறுப்பேற்றுள்ள மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 14 மாவட்டக் கழகச் செயலாளர்களும் அவற்றின் ஒன்றிய-நகர-பேரூர்-ஊராட்சிக் கழக நிர்வாகிகளும் கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள்- கழகத்தின் தூண்கள் நாங்கள் என்பதுபோல மாநாட்டுப் பணிகளைத் தங்கள் தோள்களில் தாங்கி நிற்கின்றனர்.

 

கழகத்தின் முன்னணியினர் பலரும் ஈரோடுக்குச் சென்று மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்து, தாங்கள் பெற்ற இன்பத்தை நானும் பெறவேண்டும் என்கிற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள் தங்கள் இல்லத்து நிகழ்வு போல இயக்கத்தின் மாநாட்டுப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

 

ஈரோட்டிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர் ஓட்டங்கள் மூலம் பல கிலோமீட்டர்கள் பயணித்து மாநாடு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பொதுமக்களிடம் மேற்கொண்டிருக்கிறார்கள். கழகத்தினரின் கொள்கை முழக்கும் மாநாடுகள் எல்லாம் தமிழ்நாட்டு பொதுமக்களின் நலன் காப்பதற்காகத்தானே! அதனால்தான் மண்டல மாநாட்டை மக்களின் மாநாடாக நடத்தும் பொறுப்பை கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்றுச் செயல்பட்டு வருகிறார்கள்.

 

மேற்கு மண்டலத்தில் உள்ள 14 மாவட்டக் கழகத்தின் துணை அமைப்பினரும் மாநாட்டுப் பந்தல் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தில் கூடி தங்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மாநாட்டின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது எனத் திட்டங்கள் தீட்டி அவற்றைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

 

திராவிட இயக்கத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பகுத்தறிவுப் பகலவனாம்- நம் இனத்திற்கு சுயமரியாதை உணர்வூட்டிய தந்தை பெரியாரின் ஈரோட்டு மண்ணில், பேரறிஞர் அண்ணா உருவாக்கித் தந்த கழகத்தைக் கட்டிக் காத்து இந்திய அரசியலைத் தன் பக்கம் திருப்பிய தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடனும், வழிகாட்டுதலுடனும் நடைபெறும் மண்டல மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளுடன் அழைப்பிதழும் தயாராகிவிட்டது.

 

வீட்டில் ஒரு விழா என்றால் அதனை குடும்பத்து உறவுகளுடன் முதலில் பகிர்ந்து கொள்வதுதானே வழக்கம். அதுபோல, கழகம் எனும் குடும்பத்தின் உறுப்பினர்களாம் உடன்பிறப்புகளாகிய உங்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் விவரங்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். ஈரோடு தந்தை பெரியார் திடல், அண்ணாநகரில் மார்ச் 24 சனிக்கிழமை, 25 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டில், கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாகி, மரணத்திற்குப் பிறகும் நம் மனதில் உயிர்த்துடிப்புடன் நிறைந்திருக்கும் கழகத்தின் தீரர்களை நினைவூட்டும் வகையில் அவர்களின் பெயர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் சூட்டப்பட்டுள்ளன.

 

தஞ்சை மண்டல தளகர்த்தராக விளங்கிய கோ.சி.மணி பெயரில் மேடை, முரட்டுப் பக்தன் எனத் தலைவர் கலைஞரால் போற்றப்பட்ட தூத்துக்குடி என்.பெரியசாமி பெயரில் பந்தல், பி.ஏ.சாமிநாதன் பெயரில் அரங்கம், தமிழ் மணக்கப் பணி செய்து கடைசிவரை கழகக் கொள்கைகள்படி வாழ்ந்து மறைந்த பேராசிரியர் முனைவர் மா.நன்னன் பெயரில் உள்முகப்பு, எவரெஸ்ட் மு.கணேசன் பெயரில் முன் முகப்பு, ஈரோடு மா.சுப்ரமணியம் பெயரில் நுழைவாயில் என ஒவ்வொன்றிலும் தீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

 

அது மட்டுமா? மேற்கு மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கழகம் வளர்க்கத் துணை நின்று நம் நினைவில் என்றென்றும் நிற்கின்ற எஸ்.எஸ்.பொன்முடி, பொள்ளாச்சி எஸ்.ராஜூ, குன்னூர் அரங்கநாதன், பேரூர் அ.நடராஜன், கரூர் கே.வி.ராமசாமி, ஜே.கே.கே.சுந்தரம், நாமக்கல் டி.பி.ஆறுமுகம், சங்ககிரி வி.முத்து, தம்பு (எ) செல்வராஜ், திருப்பூர் சுலக்சணா ஆகியோர் பெயர்களால் தோரண வாயில்கள் அமைக்கப்படுகின்றன.

 

மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, உங்களில் ஒருவனான நான் எழுதிய முதல் மடலில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் பி.எஸ்.சி., பி.டி. அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிருப்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மகளிருக்கான சமத்துவம்-சமஉரிமை இவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ள இயக்கத்தின் இரண்டு நாள் மாநாட்டுக்கு கழகக் கொள்கை முழங்கும் பெண்மணி தலைமை தாங்குவது மிகச் சிறப்பன்றோ!

 

முதல் நாள் நிகழ்வில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருமை நண்பர் திருச்சி சிவா எம்.பி. அவர்கள் மாநாட்டினை திறந்து வைக்க, கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் அவர்கள் 65 அடி உயர கொடிக்கம்பத்தில் இருவண்ணக் கொடியினை உயர்த்தி வைக்கிறார். பறை அதிர, பார் வியக்க, பட்டாளம் நிகர் கொள்கை மறவர்கள் குழுமியிருக்க கழக மாநாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

 

மார்ச் 24 சனிக்கிழமை முதல்நாள் மாநாட்டில் காலை 9 மணிக்கு தமிழ் மரபுக்குரிய வகையில் தவில்செல்வம்- பத்மஸ்ரீ அரித்துவாரமங்கலம் டாக்டர் ஏ.கே.பழனிவேல் அவர்களும் அவரது குழுவினரும் நாதசுரம்-தவில் வாயிலாக செவிகளுக்கு இசை விருந்து படைக்கிறார்கள்.

 

காலை 10 மணிக்கு கொடியேற்று விழா உரையினை முனைவர் கோவி.செழியன் ஆற்ற, காலை 10.30 மணிக்கு மண்டல மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவரும் மாவட்ட கழகச் செயலாளருமான சு.முத்துசாமி அவர்கள் மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து வரவேற்புரை ஆற்றுகிறார். அவருடன் இணைந்து நின்று, மலை போன்ற மாநாட்டுப் பணிகளை தங்கள் தோள்களில் சுமந்து சிறப்பாக நிறைவேற்றும் மேற்கு மண்டலத்தின் 14 மாவட்ட கழகச் செயலாளர்களான என்.நல்லசிவம், பா.மு.முபாரக், எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ஆ.இராஜா, இரா.இராஜேந்திரன், க.செல்வராஜ், இல.பத்மநாபன், சி.ஆர்.ராமச்சந்திரன், இரா.தமிழ் மணி, மு.முத்துசாமி, நா.கார்த்திக், நன்னியூர் ராஜேந்திரன், கே.எஸ்.மூர்த்தி, பார்.இளங்கோவன் ஆகியோர் மாநாட்டுத் தலைவரை வழிமொழிகிறார்கள்.

 

இதனைத் தொடர்ந்து காலை 11.15 மணிக்கு மாநாட்டுத் தலைவர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றுகிறார். கழக மாநாடுகள் என்றாலே பல்வேறு தலைப்புகளில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் பெரும்பணிகளையும், கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளையும், தமிழகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் சவால்களையும் சொற்பொழிவாளர்கள் பலரும் உரை நிகழ்த்துவதும், முரசு ஒலிப்பது போல அவர்களின் முழக்கம் கேட்டு மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கானத் தொண்டர்கள் உணர்வெல்லாம் கொள்கை ததும்ப ஆர்ப்பரிப்பதும் வேறெந்த இயக்கமும் காண முடியாத காட்சியாகும். ஈரோடு மண்டல மாநாட்டின் இருநாட்களிலும் 50 தலைப்புகளில் கழகத்தின் சொற்பொழிவாளர்கள் கருத்து மழை பொழிகிறார்கள். அதில் இடி இடிக்கும், மின்னல் மின்னும், வெள்ளம் கரை புரளும்.

 

முதல் நாள் பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் திறப்பாளரான கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றுகிறார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3 மணிக்கு புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் கொள்கை முழக்க இசை நிகழ்ச்சி செவிகளுக்கு இன்பம் சேர்க்கிறது.  தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கழகத்தினர் ஆற்றும் உரையினைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் சாதனைகளை முன்னிறுத்தி உரையாற்றுகிறார்.

 

இரவு மாநாடு நிறைவடைந்தாலும் எங்கள் இல்லம் இதுதான் என்பதுபோல கழகத்தினர் பலரும் குடும்பம் குடும்பமாக மாநாட்டுப் பந்தலிலேயே படுத்துறங்கி, மறுநாள் நிகழ்ச்சிகளுக்கு உதயசூரியனுடன் போட்டிப் போட்டு எழுந்து தயாராவது கழகத்தின் நீண்ட வரலாறு. இந்த இயக்கத்தின் வேர்களாக இரத்த நாளங்களாக விளங்கும் தொண்டர் பட்டாளத்துடன் இரண்டாம் நாள் மாநாடு மார்ச் 25ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்குகிறது.

 

ஞாயிறு என்றாலே சூரியன்தானே! அந்நன்னாளில் காலை 9 மணிக்கு கழகக் கொள்கைப் பாடல்களை தன் கம்பீரக் குரலில் இசைக்கவிருக்கிறார்கள் இறையன்பன் குத்தூஸ் அவர்களும் அவர்தம் குழுவினரும். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 12.30 மணியளவில் நகைச்சுவையுடன் நாட்டு நடப்பை எடுத்துக்கூறி சிந்திக்க வைக்கும் திண்டுக்கல் லியோனியின் உரைவீச்சு செவிகளுக்கு விருந்து படைத்த பிறகு, மதிய உணவுக்காக சிறிது இடைவெளி. அந்த நேரம் கூட கழகத் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் அளவளாவி-அன்பை விருந்தாகப் பரிமாறிக் கொள்ளும் நேரம்தானே!

 

கழக மாநாடுகள் என்றாலே இசைமுரசு நாகூர் இ.எம்.அனீபாவின் வெண்குலக் குரல் ஒலிக்காமல் இருக்காது. அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது புதல்வர் இசை முரசொலி நாகூர் இ.எம்.அனீபா நௌஷாத் அலி அவர்களும் குழுவினரும் அனீபா வழியில் செவிகளை நனைக்கும் நிகழ்வு மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.

 

கொள்கை கீதம் நிறைவடைந்ததும், தமிழ்நாட்டின் நலன் காக்கும் மாநாட்டுத் தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படவிருக்கின்றன. மாநாட்டுப் பந்தல் கொள்ளாமல் குவியப்போகும் தொண்டர்களின் பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் நிறைவேறவிருப்பதை இப்போதே மனக்கண்ணில் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து நடைபெறும் சொற்பொழிவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கழகத்தின் பொதுச்செயலாளரும் தலைவர் கலைஞரின் கொள்கை உறவுத் தோழரும் ஒவ்வொரு மாநாட்டிலும் திராவிட சித்தாந்த வகுப்பெடுப்பவருமான நமது இனமானப் பேராசிரியர் நல்லுரை நவில்கிறார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு நிறைவுப் பேருரையினை கழகத்தின் செயல்தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான், நமது அன்புத் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடனும் வழிகாட்டுதலுடனும் நிகழ்த்தவிருக்கிறேன்.

 

இருநாட்களும் நிறைந்துள்ள நிகழ்வுகளை நிறைவேற்றி முடித்திடுவது பெரும்பணி என்றபோதும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் நீங்கள் இருக்கும்போது அவற்றை எளிதில் நிறைவேற்றிடலாம் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அதன் முன்னோட்டமாக, திராவிட இயக்க கண்காட்சி ஈரோடு மண்டல மாநாட்டு வளாகத்தில் முன்கூட்டியே திறக்கப்படுகிறது.

 

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில் அமைக்கப்பட்டுள்ள திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியினை அப்படியே அச்சில் வார்த்ததுபோல ஈரோட்டில் மாநாட்டுக் கண்காட்சி உருவாகியுள்ளது. கழகத்தின் மூத்த முன்னோடிகள் தொடங்கி இளைஞரணி-மாணவரணி-மகளிரணி உடன்பிறப்புகள் வரை அனைவரும் கண்டு மகிழ்வதுடன், பொதுமக்களும் இன்றைய தலைமுறையினரும் திராவிட இயக்கக் கொள்கைகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

நூறாண்டுக்கு முந்தைய அடிமை நிலையிலிருந்து நம்மை மீட்டு, ஆளாக்கி, சுதந்திரமும் சுயமரியாதையும் உள்ள மனிதர்களாக உலவ விட்ட பேரியக்கத்தின் தியாகங்களைத் தெரிந்துகொள்ளவும், இன்றும் திராவிடக் கொள்கைகளே தமிழ்நாட்டைப் பாதுகாத்து வருகிறது என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்திடவும் உதவக் கூடிய இந்தக் கண்காட்சியில் இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான இயற்கை வள பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, சாலை பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு, விபத்து நேரத்தில் செய்ய வேண்டிய முதலுதவி உள்ளிட்டவற்றை விளக்கும் காட்சிகளும் அரங்கில் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் பெண்களும் கண்காட்சியைக் காணவும், மாநாட்டின் சிறப்பை அறியவும் இப்போதே ஆர்வம் காட்டும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

 

அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில் கொண்ட தி.மு.கழகத்திற்கு மட்டுமே ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது என்பதே தமிழ்நாட்டு மக்களின் மனதில் உள்ள எண்ணம். மக்கள் மனதை எதிரொலிக்கும் வகையில் ஈரோட்டில் நம் வலிமையைக் காட்டிட கழகத்தின் செயல்தலைவராக-கலைஞரின் பிள்ளையாக-உங்களில் ஒருவனாக அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாட்டின் பிணி நீக்கிட அணி திரள்வீர்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களிடம் 21 ஆயிரம் கோடி; பாஜகவின் டிஜிட்டல் வழிப்பறி; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் நியாயமா? 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது என்பது ஒரு காலத்தில் பாதி நாளை முழுங்கும் செயலாகவே இருந்தது. வங்கிகளுக்குச் செல்லும் படிக்காதவர்களையும், ஏழை மக்களையும் காக்க வைத்து, அவமானப் படுத்தும் செயல்களும் ஒரு சில வங்கிகளில் அரங்கேறும். ஆனால், இதற்கு மாற்றாக ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டு வாடா செய்யும் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தேசிய வங்கிகள் எல்லாம் மடம் போல் செயல்பட்டு வந்த நிலையில், தனியார் வங்கிகள் மூலம் இந்த ஏடிஎம் இயந்திர புரட்சி நடைப்பெற்றது.  வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலே அலர்ஜியானவர்களுக்கு இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது.

எப்படியோ வங்கி பரிவர்த்தனை எளிதாகிப் போன சமயத்தில்தான், திடீரென அனைவரின் தலையிலும் இடிவிழுந்தது போல்  ஒன்றிய பாஜக அரசின் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பல்வேறு அவமானங்களையும், மன உளைச்சல்களையும் தந்தது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திடீரென தொலைக் காட்சியில் தோன்றி அறிவித்ததும் நாட்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்.

குறிப்பாக, நடுத்தர ஏழை எளிய மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த சிறிய சேமிப்புகளும் போச்சே என்று அரண்டு போனார்கள். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் பட்ட கஷ்டத்தினை சொல்லி மாளாது. கருப்பு பணத்தை ஒழிக்கத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், பணக்காரர்களுக்கு என்னவோ இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆட்களை அமர்த்தியும், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தியும் அவர்கள் தங்களது செல்லா பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொண்டார்கள்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் வங்கிகளின் வாசலில் தவமாய் கிடந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தனர். மக்களின் இந்தத் துயரத்தை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதும், திடீரென ரூட்டை மாற்றிய ஒன்றிய அரசு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை எனப் புதுக் கதையைக் கூறத்தொடங்கியது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் அல்லலுற்ற மக்கள் முற்றிலும் குழம்பி போனார்கள். கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று கங்கணம் கட்டி கூறியவர்கள் டிஜிட்டல் இந்தியா, புதிய இந்தியா என்று பிளேட்டை மாற்றி போட்டனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் பலருக்கு ஆரம்பத்தில் புரியாமல் போனாலும், வேறு வழியின்றி நாளடைவில் அதனைப் பழக ஆரம்பித்தனர். ஆனால், அதிலும் மெதுவாக மக்களுக்கு மறைமுகமாக இன்னல்கள் வர ஆரம்பித்தன. வழக்கமாகவே உண்மைகளை மூடி மறைக்கும் வங்கிகளும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தன. சேமிப்பு கணக்கு வைக்க ஒவ்வொரு வங்கியும் தங்கள் இஷ்டம்போல் 500 முதல் 5000 வரை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வாறு சேமிப்பு கணக்கில் வங்கிகள் குறிப்பிடும் தொகை இருப்பு இல்லாவிட்டால், அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் தகவல்களுக்கும் கட்டணம் உண்டு. 

இவை எல்லாம் வங்கிகள் மறைமுகமாக வசூலிக்கும் கட்டணங்கள் என்பது எவ்வளவு பாமர மக்களுக்கு தெரியும் என்பது கூற இயலாது. இதுபோன்று பொதுமக்கள் சேமிக்கும் சிறுதொகைக்கும் அபராதம் என்ற பெயரில் அவர்களது பணத்தை வங்கிகள் நேரடியாக எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மினிமம் பேலன்ஸ் வைக்காத கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம், நாடு முழுவதும் மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாயும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக 8 ஆயிரத்து 289 கோடி ரூபாயும், எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் அனுப்பிய வகையில் 6 ஆயிரத்து 254 கோடி ரூபாயும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வசூலித்துள்ளன.

இந்த தகவல்கள் மாநிலங்களவையில் நிதித்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையின் மூலம்  தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வகைகளில் மட்டுமே ஒட்டு மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்து 587 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. இதில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விதிகள் எல்லாம் நடுத்தர மற்றும் சாமானிய  மக்களுக்குத் தான். பெரிய கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு கிடையாது. மாறாக அவர்களுக்கு வரிகளில் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல சலுகைகளை ஒன்றிய மோடி அரசு அளித்து வருகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் 56 லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாரா கடன்களாக வங்கிகள் அறிவித்துள்ளன. இதில், 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி ரூபாயை வாரா கடன்களாக வங்கிகள் தள்ளுபடி செய்து விட்டன.  

இவை அனைத்தும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகைகள் ஆகும்.  இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவையாகும். நிதி அமைச்சகத்தின் இந்த விளக்கம் மூலம், ஒன்றிய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நீதியும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதியையும் கடைப்பிடிப்பது அம்பலமாகியுள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அபராதம் என்ற பெயரில் அபகரித்துள்ள ஒன்றிய மோடி அரசின் இந்த செயலை, ‘ஒரு டிஜிட்டல் வழிப்பறி’ என்று குற்றம் சாட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Is CM Stalin's obsession justified? for 21 thousand crores to the people and BJP's digital robbery

இதுகுறித்து பேசிய அவர், “அப்பாவி மக்களின் பணத்தை அபராதம் என்ற பெயரில் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை சுருட்டியது பாஜக. கருப்பு பணத்தை ஒழித்து நாட்டின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?” என்று கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்ததோடு மட்டுமல்லாமல், சுருக்கு பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏழை மக்களிடம் இருந்து உருவியிருக்கிறார்கள்’’ என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  

கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித்தந்து விட்டு, அதனை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா? என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும் இது ஏழைகளுக்கான அரசு என்றும்  பிரதமர் மோடி கூசாமல் புளுகுகிறார் என்றும், மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிபறி நடத்தும் இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு ? என்றும் குற்றம் சாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மொத்தத்தில் எளிமையான பணப்பரிவர்த்தனை என கூறிவிட்டு,  மக்களுக்கே தெரியாமல் அவர்களின் பணத்தை சுரண்டும் இந்த நடைமுறை,  முதலமைச்சரின் கூற்றுப்படி, புதிய இந்தியாவின் டிஜிட்டல் வழிப்பறி தான் என்பதில் அய்யமில்லை !

Next Story

பற்றி எரியும் 10 வருட புகை; கழகத்தில் இணைந்த விஜய்! 

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
tamilaga vetri kazhagam vijay political strategic

தமிழ்நாட்டிலிருந்தும் தமிழ் மக்களிடமிருந்தும் பிரிக்கவே முடியாத இரு விஷயங்கள் அரசியலும் சினிமாவும். காலத்திற்கேற்ப அரசியலில் கொள்கைகளும் சினிமாவில் தொழில்நுட்பங்களும் மாறியிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் தொடரும் சில விஷயங்களும் உள்ளன. அதில் ஒன்று மூன்றெழுத்து செண்டிமெண்ட். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தனுஷ், சிம்பு வரை திரையுலகில் ஆளுமை செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கிற மூன்றெழுத்துக்காரர்கள் ஏராளம். இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் செய்த சில சம்பவங்கள் சினிமாவை தாண்டி அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்படி முந்தைய தலைமுறை உச்ச நட்சத்திரங்கள் அக்கால சினிமாவிலும் அரசியலிலும் ஏற்படுத்திய தாக்கத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் இக்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறவர் விஜய். 

பொதுவாக கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்றால் கோடம்பாக்கத்தின் உதவி தேவை என்ற பேச்சு தமிழக அரசியலில் காலங்காலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு சொல்லாடல். அந்த வகையில் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் நடிகர் விஜய்யும் கோட்டை வாசலை மிதிக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனை ரசிகர்கள் விரும்புவதை விட விஜய்யுமே விரும்புகிறார். இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, இந்த இயக்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என அறிவித்தார் விஜய். இதற்கேற்றார் போல 2010க்கு பிறகு வெளியான விஜய்யின் பல படங்களில் அரசியல் வசனங்கள் ஆங்காங்கே அனல் பறக்கத் தொடங்கின. இது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்தது. இந்த காலகட்டம் தான் தற்போது விஜய் செய்யும் சம்பவங்களுக்கான ஆரம்பப்புள்ளி எனலாம்.

தலையாய் மாறிய தலைவா

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானது. பொதுவாக விஜய் படம் வெளியாகும் போது அவ்வப்போது சிறுசிறு சர்ச்சைகள் வருவது வழக்கம் என்றாலும், 'தலைவா' வுக்கு படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை வந்தது. 'டைம் டு லீட்' என்ற டேக் லைனுடன் வெளியான தலைவா படத்தின் டைட்டில் அப்போது மிகப்பெரிய பேசுபொருளானது. இந்த டேக் லைன் விஜய்யின் அரசியல் வருகைக்கான முடிவை உறுதி செய்துள்ளது என ரசிகர்கள் பேசத் தொடங்கினர். இந்த பேச்சு பெரிதாகவே, அப்போது இருந்த அதிமுக ஆட்சியால் படத்திற்கும் விஜய்க்கும் சில குடைச்சல்கள் கொடுக்கப்பட்டன. அதன்பின் அந்த டேக் லைன் நீக்கப்பட்டு, சில காட்சிகள் கத்தரிக்கப்பட்டு படம் வெளியானது. இந்த பிரச்சனையின் போது ரசிகர்களிடம் இருந்து விஜய்க்குக் கிடைத்த ஆதரவு பிற்காலங்களில் அவர் செய்யப்போகும் சம்பவங்களுக்குத் தலையாய் அமைந்தது என்றுகூடச் சொல்லலாம்.

அதிமுகவைத் தொடர்ந்து திமுக

அதிமுகவுடன் ஏற்பட்ட சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்திருந்த சூழலில், அதற்கடுத்த ஆண்டே கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசியிருப்பார். மேலும், இப்படத்தில் 2ஜி வழக்குகள் குறித்தும் விஜய் வசனங்கள் பேசியிருப்பார். இது திமுக தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் படத்தைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள், மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு பரிசளித்தனர்.

பான் இந்தியா பிரச்சனை

அதுவரை தமிழகத்தில் மட்டுமே சம்பவம் செய்து கொண்டிருந்த விஜய் மெர்சல் திரைப்படம் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டானார். மருத்துவத் துறையில் நடைபெறும்  ஊழலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ஜி.எஸ்.டி க்கு எதிராக வசனம் பேசி மத்திய அரசைக் கண் சிவக்க வைத்தார். இது அன்றைக்கு மத்தியில் ஆளும் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதற்கு எல்லாம் ஒருபடி மேலே சென்ற எச். ராஜா விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என்பதைக் குறிப்பிட்டு அவர் மீது மத ரீதியிலான சாயத்தைப் பூசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் மெர்சல் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார். இவ்விவகாரத்தில் ஸ்டாலின் தொடங்கி ராகுல் காந்தி வரை விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

சர்க்காரும் முதல்வரும்

மெர்சலை தொடர்ந்து நடிகர் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே மீண்டும் வெடித்தது ஒரு அரசியல் சர்ச்சை. அதற்கு காரணம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துக்கள் தான். ஆம், இந்த விழாவில், "எல்லாரும் கட்சி தொடங்கி, பிரச்சாரம் செய்துதான் தேர்தலில் நிப்பாங்க , ஆனால் நான் சர்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறேன். சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்" என்று பேசினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இது மட்டுமல்லாமல் படத்தில் வில்லியாக வரும் வரலட்சுமிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்ததற்காக அதிமுகவினர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இப்படி ரீலிலும், ரியலிலும் நிகழ்கால அரசியலையும் எதிர்கால திட்டங்களையும் கூறி அரசியல்வாதிகளை அதிரவைத்தார் சர்கார் விஜய். 

பிகில் மேடைப் பேச்சு

அடுத்ததாக மீண்டும் அட்லீயுடன் இணைந்த விஜய் பிகில் படத்தில் நடித்திருந்தார். வழக்கம் போல இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சுக்கள் அடுத்தநாளே பெரும் பேசுபொருளானது. அந்த விழாவில், "யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, மக்கள் அவர்களை அங்குதான் உட்கார வைக்க வேண்டும்" என்று கூறினார். அத்துடன் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானதைச் சுட்டிக்காட்டிய விஜய், "சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர்கள் மீது பழி போடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள்" என்றார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு அப்போது தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே வெளியான இப்படம் பெரும் ஹிட்டடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

ஊமையாக இருந்த விஜய்

கொரோனா அலை சற்று ஓய்ந்த நேரம் என்பதால், தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசைவெளியிட்டு விழா ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் பிரபலங்கள் மட்டும் பங்கேற்க நடந்த நிகழ்ச்சியில் விஜய் பேசினார். முன்பு நடந்த விழாவில் எல்லாம் அதிமுக, திமுக, பாஜக என ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை சம்பவம் செய்த விஜய் இந்த முறை யார் உடன் மல்லுக்கட்ட போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் மைக்கை பிடித்த விஜய், அவரது ஸ்டெயிலில் நடனம் ஆடி முடித்துவிட்டு, பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு ‘உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாக இருக்க வேண்டியதாக இருக்கு..’ என்று மட்டும் சொல்லி பேச்சை முடித்தார். 


இப்படி விஜய் பேசியதற்கு காரணம் இல்லாமலில்லை, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்துகொண்டிருக்கும் போது விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை நடந்துவந்த அதே சமயத்தில் மற்றொரு குழு நெய்வேலிக்கு சென்று படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியது. இறுதியாக நடைபெற்ற விசாரணையில் விஜய் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நெய்வேலியில் நடந்த படிப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் ஒன்றாகக் கூடினர். இதைப் பார்த்த விஜய் அவர்களுடன் அங்கிருந்த வேன் ஒன்றில் ஏறி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் இந்திய அளவில் வைரலானது. இந்த சம்பவத்தை மனதில் வைத்துதான் விஜய் அவ்வாறாக பேசினார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

கப்பு முக்கியம் பிகிலு

லியோ படத்தின்  இசைவெளீயிட்டு விழாவிற்காக எல்லாம் தயாராகிவிட்டது; டிக்கெட்டுகள் கூட விற்பனையாகி விட்டது. ஆனால், இடப் பற்றாக்குறையால் லியோ இசை வெளியிட்டு விழா ரத்தானது. ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விழா ரத்தானதாக பேசப்பட்டாலும், படக்குழு இதனை அறவே மறுத்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வெற்றிவிழா நடைபெற்றது. பரபரப்பான சூழலில் அரசியல் குறித்து விஜய் என்ன பேசப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தொகுப்பாளர் தமிழ்நாட்டை பற்றி என்று கேட்டதற்கு 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறினார்.  

இவற்றிற்கு மத்தியில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சைக்கிளில் சென்று வாக்களித்தார். இதனை விஜய் டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்களிக்க சைக்கிளில் சென்றதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். இன்னும் சிலர் அவரது மாஸ்க் கலரில் குறியீடு இருப்பதாகக் கூறி அதனை டீகோடிங் செய்து கொண்டிருந்தனர். விஜய்யின் இந்த செயல் உள்ளூர் மீடியாவையும் தாண்டி நேஷனல் மீடியாவிலும் தலைப்பு செய்தியாக மாறிப் போனது. இப்படி விஜய் செய்யும் சிறு சிறு செயல்கள் கூட சினிமாவையும் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி பல சம்பவங்களைச் செய்து எப்போதும் லைம் லைட்டில் இருக்கும் விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். 

பொதுவாக எங்கு ஒரு அரசியல் கட்சி பிரவேசித்தாலும் ‘மாற்று’ என்பதும் தொத்தி வரும், அந்த வகையில் பார்க்கும்போது, ‘தமிழக வெற்றி கழக’ தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில உரிமை, சமத்துவக் கொள்கைப் பற்று உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பது, அவர் தமிழகத்தின் பாரம்பரிய கழக ஆட்சிகளை பின்பற்றுவாரா இல்லை வேறு ஏதேனும் கொள்கைகளை முன்னிறுத்துவாரா என்று காலம் தான் பதில் சொல்லும்.