Skip to main content

 அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான்: ஸ்டாலின்

 

mk


 அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில் கொண்ட தி.மு.கழகத்திற்கு மட்டுமே ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம்:  ‘’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கழகத்தின் ஈரோடு மண்டல மாநாட்டிற்கான இரண்டாவது அழைப்பு மடல்.

 

சங்கத் தமிழ்ப் பாடல்களுக்குத் தனது தங்கத் தமிழ் வரிகளால் கவிதைநடை உரை எழுதியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் புறநானூற்றுக் காட்சிகளை விவரித்திருப்பார். களத்தினில் குதிரைப் படைகள் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளன. யானைப் படைகள் எந்தளவு வலிமை காட்டி வருகின்றன. தேர்ச் சக்கரங்களில் வீழ்ந்த எதிரிப் படைகளின் எண்ணிக்கை எவ்வளவு, வெற்றி முரசம் கொட்டிய சொந்த நாட்டு வீரர்கள் எப்போது திரும்பி வருவார்கள் எனப் பல நிலவரங்களும் அந்தப் பாடல்களின் வழியே தெரியவரும்.

 

அதுபோலத்தான், கொள்கைப் பட்டாளமாக ஈரோட்டில் குவிந்திடுவோம் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் விடுத்த முதல் அழைப்பு மடல் கண்டு, ஈரோடு மண்டல மாநாட்டுப் பணிகளின் ஒவ்வொரு அங்குல முன்னேற்றம் குறித்த செய்திகளும் உடனுக்குடன் வந்தவண்ணம் உள்ளன. கழக மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவரான மாவட்டக் கழகச் செயலாளர் சு.முத்துசாமி அவர்கள் ஒருநாளைக்கு 24 மணி நேரம் போதாது என்கிற வகையில் கடிகார முள்ளைவிட வேகமாக செயலாற்றியபடி கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு உடனுக்குடன் தகவல் அளித்தபடி இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் கழகத்தின் வரவேற்புக் குழுவின் மாநாட்டுச் செயலாளர்களாக பொறுப்பேற்றுள்ள மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 14 மாவட்டக் கழகச் செயலாளர்களும் அவற்றின் ஒன்றிய-நகர-பேரூர்-ஊராட்சிக் கழக நிர்வாகிகளும் கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள்- கழகத்தின் தூண்கள் நாங்கள் என்பதுபோல மாநாட்டுப் பணிகளைத் தங்கள் தோள்களில் தாங்கி நிற்கின்றனர்.

 

கழகத்தின் முன்னணியினர் பலரும் ஈரோடுக்குச் சென்று மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்து, தாங்கள் பெற்ற இன்பத்தை நானும் பெறவேண்டும் என்கிற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கழகத் தொண்டர்கள் தங்கள் இல்லத்து நிகழ்வு போல இயக்கத்தின் மாநாட்டுப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

 

ஈரோட்டிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர் ஓட்டங்கள் மூலம் பல கிலோமீட்டர்கள் பயணித்து மாநாடு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பொதுமக்களிடம் மேற்கொண்டிருக்கிறார்கள். கழகத்தினரின் கொள்கை முழக்கும் மாநாடுகள் எல்லாம் தமிழ்நாட்டு பொதுமக்களின் நலன் காப்பதற்காகத்தானே! அதனால்தான் மண்டல மாநாட்டை மக்களின் மாநாடாக நடத்தும் பொறுப்பை கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் ஏற்றுச் செயல்பட்டு வருகிறார்கள்.

 

மேற்கு மண்டலத்தில் உள்ள 14 மாவட்டக் கழகத்தின் துணை அமைப்பினரும் மாநாட்டுப் பந்தல் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தில் கூடி தங்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மாநாட்டின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது எனத் திட்டங்கள் தீட்டி அவற்றைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

 

திராவிட இயக்கத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பகுத்தறிவுப் பகலவனாம்- நம் இனத்திற்கு சுயமரியாதை உணர்வூட்டிய தந்தை பெரியாரின் ஈரோட்டு மண்ணில், பேரறிஞர் அண்ணா உருவாக்கித் தந்த கழகத்தைக் கட்டிக் காத்து இந்திய அரசியலைத் தன் பக்கம் திருப்பிய தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடனும், வழிகாட்டுதலுடனும் நடைபெறும் மண்டல மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளுடன் அழைப்பிதழும் தயாராகிவிட்டது.

 

வீட்டில் ஒரு விழா என்றால் அதனை குடும்பத்து உறவுகளுடன் முதலில் பகிர்ந்து கொள்வதுதானே வழக்கம். அதுபோல, கழகம் எனும் குடும்பத்தின் உறுப்பினர்களாம் உடன்பிறப்புகளாகிய உங்களிடம் மாநாட்டு அழைப்பிதழ் விவரங்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். ஈரோடு தந்தை பெரியார் திடல், அண்ணாநகரில் மார்ச் 24 சனிக்கிழமை, 25 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ள மண்டல மாநாட்டில், கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாகி, மரணத்திற்குப் பிறகும் நம் மனதில் உயிர்த்துடிப்புடன் நிறைந்திருக்கும் கழகத்தின் தீரர்களை நினைவூட்டும் வகையில் அவர்களின் பெயர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் சூட்டப்பட்டுள்ளன.

 

தஞ்சை மண்டல தளகர்த்தராக விளங்கிய கோ.சி.மணி பெயரில் மேடை, முரட்டுப் பக்தன் எனத் தலைவர் கலைஞரால் போற்றப்பட்ட தூத்துக்குடி என்.பெரியசாமி பெயரில் பந்தல், பி.ஏ.சாமிநாதன் பெயரில் அரங்கம், தமிழ் மணக்கப் பணி செய்து கடைசிவரை கழகக் கொள்கைகள்படி வாழ்ந்து மறைந்த பேராசிரியர் முனைவர் மா.நன்னன் பெயரில் உள்முகப்பு, எவரெஸ்ட் மு.கணேசன் பெயரில் முன் முகப்பு, ஈரோடு மா.சுப்ரமணியம் பெயரில் நுழைவாயில் என ஒவ்வொன்றிலும் தீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

 

அது மட்டுமா? மேற்கு மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கழகம் வளர்க்கத் துணை நின்று நம் நினைவில் என்றென்றும் நிற்கின்ற எஸ்.எஸ்.பொன்முடி, பொள்ளாச்சி எஸ்.ராஜூ, குன்னூர் அரங்கநாதன், பேரூர் அ.நடராஜன், கரூர் கே.வி.ராமசாமி, ஜே.கே.கே.சுந்தரம், நாமக்கல் டி.பி.ஆறுமுகம், சங்ககிரி வி.முத்து, தம்பு (எ) செல்வராஜ், திருப்பூர் சுலக்சணா ஆகியோர் பெயர்களால் தோரண வாயில்கள் அமைக்கப்படுகின்றன.

 

மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, உங்களில் ஒருவனான நான் எழுதிய முதல் மடலில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் பி.எஸ்.சி., பி.டி. அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிருப்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மகளிருக்கான சமத்துவம்-சமஉரிமை இவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ள இயக்கத்தின் இரண்டு நாள் மாநாட்டுக்கு கழகக் கொள்கை முழங்கும் பெண்மணி தலைமை தாங்குவது மிகச் சிறப்பன்றோ!

 

முதல் நாள் நிகழ்வில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருமை நண்பர் திருச்சி சிவா எம்.பி. அவர்கள் மாநாட்டினை திறந்து வைக்க, கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் அவர்கள் 65 அடி உயர கொடிக்கம்பத்தில் இருவண்ணக் கொடியினை உயர்த்தி வைக்கிறார். பறை அதிர, பார் வியக்க, பட்டாளம் நிகர் கொள்கை மறவர்கள் குழுமியிருக்க கழக மாநாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

 

மார்ச் 24 சனிக்கிழமை முதல்நாள் மாநாட்டில் காலை 9 மணிக்கு தமிழ் மரபுக்குரிய வகையில் தவில்செல்வம்- பத்மஸ்ரீ அரித்துவாரமங்கலம் டாக்டர் ஏ.கே.பழனிவேல் அவர்களும் அவரது குழுவினரும் நாதசுரம்-தவில் வாயிலாக செவிகளுக்கு இசை விருந்து படைக்கிறார்கள்.

 

காலை 10 மணிக்கு கொடியேற்று விழா உரையினை முனைவர் கோவி.செழியன் ஆற்ற, காலை 10.30 மணிக்கு மண்டல மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவரும் மாவட்ட கழகச் செயலாளருமான சு.முத்துசாமி அவர்கள் மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து வரவேற்புரை ஆற்றுகிறார். அவருடன் இணைந்து நின்று, மலை போன்ற மாநாட்டுப் பணிகளை தங்கள் தோள்களில் சுமந்து சிறப்பாக நிறைவேற்றும் மேற்கு மண்டலத்தின் 14 மாவட்ட கழகச் செயலாளர்களான என்.நல்லசிவம், பா.மு.முபாரக், எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ஆ.இராஜா, இரா.இராஜேந்திரன், க.செல்வராஜ், இல.பத்மநாபன், சி.ஆர்.ராமச்சந்திரன், இரா.தமிழ் மணி, மு.முத்துசாமி, நா.கார்த்திக், நன்னியூர் ராஜேந்திரன், கே.எஸ்.மூர்த்தி, பார்.இளங்கோவன் ஆகியோர் மாநாட்டுத் தலைவரை வழிமொழிகிறார்கள்.

 

இதனைத் தொடர்ந்து காலை 11.15 மணிக்கு மாநாட்டுத் தலைவர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றுகிறார். கழக மாநாடுகள் என்றாலே பல்வேறு தலைப்புகளில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் பெரும்பணிகளையும், கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளையும், தமிழகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் சவால்களையும் சொற்பொழிவாளர்கள் பலரும் உரை நிகழ்த்துவதும், முரசு ஒலிப்பது போல அவர்களின் முழக்கம் கேட்டு மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கானத் தொண்டர்கள் உணர்வெல்லாம் கொள்கை ததும்ப ஆர்ப்பரிப்பதும் வேறெந்த இயக்கமும் காண முடியாத காட்சியாகும். ஈரோடு மண்டல மாநாட்டின் இருநாட்களிலும் 50 தலைப்புகளில் கழகத்தின் சொற்பொழிவாளர்கள் கருத்து மழை பொழிகிறார்கள். அதில் இடி இடிக்கும், மின்னல் மின்னும், வெள்ளம் கரை புரளும்.

 

முதல் நாள் பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் திறப்பாளரான கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றுகிறார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3 மணிக்கு புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் கொள்கை முழக்க இசை நிகழ்ச்சி செவிகளுக்கு இன்பம் சேர்க்கிறது.  தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கழகத்தினர் ஆற்றும் உரையினைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் சாதனைகளை முன்னிறுத்தி உரையாற்றுகிறார்.

 

இரவு மாநாடு நிறைவடைந்தாலும் எங்கள் இல்லம் இதுதான் என்பதுபோல கழகத்தினர் பலரும் குடும்பம் குடும்பமாக மாநாட்டுப் பந்தலிலேயே படுத்துறங்கி, மறுநாள் நிகழ்ச்சிகளுக்கு உதயசூரியனுடன் போட்டிப் போட்டு எழுந்து தயாராவது கழகத்தின் நீண்ட வரலாறு. இந்த இயக்கத்தின் வேர்களாக இரத்த நாளங்களாக விளங்கும் தொண்டர் பட்டாளத்துடன் இரண்டாம் நாள் மாநாடு மார்ச் 25ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்குகிறது.

 

ஞாயிறு என்றாலே சூரியன்தானே! அந்நன்னாளில் காலை 9 மணிக்கு கழகக் கொள்கைப் பாடல்களை தன் கம்பீரக் குரலில் இசைக்கவிருக்கிறார்கள் இறையன்பன் குத்தூஸ் அவர்களும் அவர்தம் குழுவினரும். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 12.30 மணியளவில் நகைச்சுவையுடன் நாட்டு நடப்பை எடுத்துக்கூறி சிந்திக்க வைக்கும் திண்டுக்கல் லியோனியின் உரைவீச்சு செவிகளுக்கு விருந்து படைத்த பிறகு, மதிய உணவுக்காக சிறிது இடைவெளி. அந்த நேரம் கூட கழகத் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் அளவளாவி-அன்பை விருந்தாகப் பரிமாறிக் கொள்ளும் நேரம்தானே!

 

கழக மாநாடுகள் என்றாலே இசைமுரசு நாகூர் இ.எம்.அனீபாவின் வெண்குலக் குரல் ஒலிக்காமல் இருக்காது. அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது புதல்வர் இசை முரசொலி நாகூர் இ.எம்.அனீபா நௌஷாத் அலி அவர்களும் குழுவினரும் அனீபா வழியில் செவிகளை நனைக்கும் நிகழ்வு மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.

 

கொள்கை கீதம் நிறைவடைந்ததும், தமிழ்நாட்டின் நலன் காக்கும் மாநாட்டுத் தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படவிருக்கின்றன. மாநாட்டுப் பந்தல் கொள்ளாமல் குவியப்போகும் தொண்டர்களின் பலத்த கரவொலி மூலம் தீர்மானங்கள் நிறைவேறவிருப்பதை இப்போதே மனக்கண்ணில் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து நடைபெறும் சொற்பொழிவாளர்களின் உரைகளைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கழகத்தின் பொதுச்செயலாளரும் தலைவர் கலைஞரின் கொள்கை உறவுத் தோழரும் ஒவ்வொரு மாநாட்டிலும் திராவிட சித்தாந்த வகுப்பெடுப்பவருமான நமது இனமானப் பேராசிரியர் நல்லுரை நவில்கிறார். அதனைத் தொடர்ந்து மாநாட்டு நிறைவுப் பேருரையினை கழகத்தின் செயல்தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான், நமது அன்புத் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடனும் வழிகாட்டுதலுடனும் நிகழ்த்தவிருக்கிறேன்.

 

இருநாட்களும் நிறைந்துள்ள நிகழ்வுகளை நிறைவேற்றி முடித்திடுவது பெரும்பணி என்றபோதும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் நீங்கள் இருக்கும்போது அவற்றை எளிதில் நிறைவேற்றிடலாம் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. அதன் முன்னோட்டமாக, திராவிட இயக்க கண்காட்சி ஈரோடு மண்டல மாநாட்டு வளாகத்தில் முன்கூட்டியே திறக்கப்படுகிறது.

 

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில் அமைக்கப்பட்டுள்ள திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சியினை அப்படியே அச்சில் வார்த்ததுபோல ஈரோட்டில் மாநாட்டுக் கண்காட்சி உருவாகியுள்ளது. கழகத்தின் மூத்த முன்னோடிகள் தொடங்கி இளைஞரணி-மாணவரணி-மகளிரணி உடன்பிறப்புகள் வரை அனைவரும் கண்டு மகிழ்வதுடன், பொதுமக்களும் இன்றைய தலைமுறையினரும் திராவிட இயக்கக் கொள்கைகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

நூறாண்டுக்கு முந்தைய அடிமை நிலையிலிருந்து நம்மை மீட்டு, ஆளாக்கி, சுதந்திரமும் சுயமரியாதையும் உள்ள மனிதர்களாக உலவ விட்ட பேரியக்கத்தின் தியாகங்களைத் தெரிந்துகொள்ளவும், இன்றும் திராவிடக் கொள்கைகளே தமிழ்நாட்டைப் பாதுகாத்து வருகிறது என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்திடவும் உதவக் கூடிய இந்தக் கண்காட்சியில் இன்றைய தலைமுறையினருக்குத் தேவையான இயற்கை வள பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, சாலை பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு, விபத்து நேரத்தில் செய்ய வேண்டிய முதலுதவி உள்ளிட்டவற்றை விளக்கும் காட்சிகளும் அரங்கில் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பொதுமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் பெண்களும் கண்காட்சியைக் காணவும், மாநாட்டின் சிறப்பை அறியவும் இப்போதே ஆர்வம் காட்டும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

 

அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பதும், புதுப்புதுப் பெயர்கள் சூட்டுவதும் ஜனநாயக வழக்கம்தான். எனினும், இருவண்ணக் கொடியை உணர்வில் கொண்ட தி.மு.கழகத்திற்கு மட்டுமே ஆட்சி அமைக்கும் வலிமை உள்ளது என்பதே தமிழ்நாட்டு மக்களின் மனதில் உள்ள எண்ணம். மக்கள் மனதை எதிரொலிக்கும் வகையில் ஈரோட்டில் நம் வலிமையைக் காட்டிட கழகத்தின் செயல்தலைவராக-கலைஞரின் பிள்ளையாக-உங்களில் ஒருவனாக அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாட்டின் பிணி நீக்கிட அணி திரள்வீர்.’’