
தேர்தல் பணிகளுக்கு அவசரமில்லை என்றும் அப்பணிகள் முக்கியமில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த அரசியல் அமைப்பு சட்ட நாள் விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். விழா முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அரசியல் கட்சிகளாக இருக்கிற அனைவருக்கும் எந்தத் தொகுதியிலும் போட்டியிடும் உரிமை உண்டு. சிதம்பரம் தொகுதி அனைத்துக் கட்சிகளும் போட்டியிடும் தொகுதிதான். அதில் பாஜகவும் போட்டியிடட்டும் எங்கள் கொள்கைப் பகைவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வோம். தமிழ்நாட்டில் பாஜகவை தனிமைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளும் அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
தமிழகத்தில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜகவை தமிழகத்தின் எதிர்க்கட்சியாக ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும்; காட்ட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அது மக்களிடத்தில் எடுபடவில்லை. அவரை அரசியல் ஜோக்கராகவே மக்கள் பார்க்கிறார்கள்.
பேனர் விஷயத்தில் ஆதாரமில்லாமல் அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். ஆதாரத்துடன் புகார்களை முன் வைக்கட்டும். அதை திமுக எதிர்கொள்ள வேண்டிய முறையில் எதிர்கொள்ளும். தேர்தல் வேலைகள் என்பது முக்கியமல்ல. மக்கள் பிரச்சனைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து களப்பணிகளைத் திட்டமிடுகிறோம். உரிய நேரத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்வோம்” எனக் கூறினார்.