Skip to main content

மதிக்காத தேர்தல் ஆணையம்! - வருத்தத்தில் நாம் தமிழர் கட்சி!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

Election Commission didn't place NTK's Vote parentage

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் வலிமையான பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போட்டியாக, மாற்று அரசியலை முன்னிறுத்தி சீமானின் 'நாம் தமிழர் கட்சி', கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்', டி.டி.வி.தினகரனின் 'அம்மா மக்கள் முன்னேற்றம்க் கழகம்' ஆகியவை களத்தில் நின்றன. 

 

‘மாற்றத்திற்கான எளியவர்களின் புரட்சி’ என்கிற பிரகடனத்துடன் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியைத் தனித்துப் போட்டியிட வைத்தார் சீமான். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07 சதவீத வாக்குகளைப் பெற்று 9-வது இடத்தைப் பிடித்த நாம் தமிழர் கட்சி, தற்போது நடந்த தேர்தல் முடிவுகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

 

இதுகுறித்து தேர்தல் வியூக வல்லுநர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 2.15 சதவீத வாக்குகளையும், 2019-ல் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3.15 சதவீத வாக்குகளையும், நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி பெற்றது. இந்த தேர்தலில் 6.85% ஓட்டுடன் மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., தே.மு.தி.க. கட்சிகளைப் புறந்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது சாதாரண விசயமல்ல. பிரதான கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில் அக்கட்சிக்கு மூன்றாவது இடத்தை மக்கள் கொடுத்திருந்தாலும் அக்கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் தி.மு.க., அ.தி.மு.க.வை நெருங்க முடியாதபடி 10-ல் 1 பங்குக்கும் குறைவான வாக்குகளுடன் இருப்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.

 

நா.த.க நிர்வாகிகளோ, "எங்களைப் போல, பிரதான கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட்டிருந்தால் நாங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஜெயித்திருப்போம். மாற்றத்தை விரும்புகிற நடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும் எங்களை ஆதரிக்கிறபோது எங்கள் கட்சிக்கான வாக்கு வங்கியும் வலிமையாக இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் அரசியலில் கட்சி ஓட்டுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. அது எங்களிடம் வலிமையாக இல்லாதது துரதிர்ஷ்டம்தான். இனி அடுத்த தேர்தலுக்குள் கட்சியின் வாக்கு வங்கியை வலிமையாக்கும் முயற்சிதான் சீமானின் அடுத்த வியூகம்'' என்கிறார்கள். 

 

"அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகால கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிற கட்சிகளுக்கு எதிராக எளியவர்களான நாங்கள் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை. கடுமையாக உழைத்து தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டோம்; கம்பீரமாக நிற்கிறோம். இனி, வெற்றிக்கான மாற்று வியூகம் தான் எங்களின் இலக்கு'' என்கிறார் சீமான்.

 

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் சதவீதத்தை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம்  6.85% வாங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பதிவிடாமல் பொதுவாக மற்றவையில் சேர்த்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாதக வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 naam Tamil party candidate who came to file nomination in a different way

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  இதற்காக மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி இன்று வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலரும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழ் நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியோடு முடிவுற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய மகேஷ் ஆனந்த் இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 ad

முன்னதாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மக்கான், கிரீன் சர்க்கிள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க புலி வேஷமிட்டு நடனமாடியபடியும், அய்யன் திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், மருது சகோதரர்கள், ராஜராஜ சோழன் போன்று வேடமிட்டு பேரணியாக வந்தனர்.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.