கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் இருப்பதாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை முதல்வராக்க பாஜக தலைமை திட்டமிட்டு காய் நகர்த்திவருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எஸ்.வி. சேகர், "எடியூரப்பாவை திருப்திப்படுத்தாமல், முதல்வர் பதவியிலிருந்து அவரை நீக்கினால், அது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். வயதைக் காரணம் காட்டி அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது. அவர் இன்னும் அரசியலில் ஆக்டிவாக உள்ள அரசியல்வாதியாகும்.
எடியூரப்பாவுக்கு எதிரான இந்தக் குழப்பங்களுக்குப் பின்னணியில் இருப்பது பி.எல். சந்தோஷ்தான். அவரை முதல்வராக அறிவிக்க வேண்டும் என அவர் காய் நகர்த்துகிறார். எடியூரப்பாவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு இவருக்கு கிடையாது.
எனவே, அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவாகத்தான் இருக்கும். டெல்லி லாபியை வைத்துக்கொண்டு ஏற்கனவே சந்தோஷ் இப்படியான குழப்பங்களை ஏற்படுத்தியதால்தான், தற்போது ஓரம் கட்டப்பட்டுள்ளார். இதனால் டெல்லியிலுள்ள பாஜக தலைவர்களிடம், எடியூரப்பாவுக்கு எதிராக தொடர்ந்து மூவ் செய்துவந்துள்ளார். பிரதமர் மோடி, இந்த விஷயத்தில் உரிய வகையில் முடிவெடுத்து எடியூரப்பா அதிருப்தியடைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்கிறார்.