இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று (20-02-24) காலை 11 மணிக்கு 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தாக்கல் செய்து பேசினார். இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ‘இந்த தி.மு.க. அரசு நான்காவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எதிர்பார்த்த பயன் இல்லை. 2024-2025ஆம் ஆண்டு பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் நிரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றும் முயற்சியாக இருந்ததே தவிர, எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.
அ.தி.மு.க அரசு அதிக கடன் வாங்கி, வருவாய் செலவினங்கள் மேற்கொள்வதாக குறை கூறிய திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்கிவிடுவோம் என்று வாய்ஜாலம் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசு உறுதி அளித்தபடி நிதிநிலையை மேம்படுத்தியதா? என்றால் இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உரையின் மீது பதில் அளிக்கும்போது, தனது அரசின் சாதனைகளாக 10 சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழ் நாட்டின் சாதனையாகச் சொல்லலாமே தவிர, திமுக அரசின் திராவிட மாடல் சாதனை என்று சொல்ல முடியாது. பிறருடைய சாதனைகளை, குறிப்பாக அ.தி.மு.க அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், விடியா திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.