Skip to main content

“குறுவை சாகுபடி தொகுப்பு ஏமாற்று அரசியல்” - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Edappadi Palaniswami Condemns Kuruvai Sachupadi Synthesis Cheating Politics

கர்நாடகத்தில் காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற தமிழக அரசால் இயலவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவிரியில் 2023-2024ஆம் ஆண்டுக்கான பங்கு நீரை வாதாடி பெற இயலாத தி.மு.க அரசு, இந்த ஆண்டான 2024-25லும், மே மற்றும் ஜூன் மாதத்தில் நமக்கு வரவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கான எவ்வித முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காலத்திற்கு ஏற்ற தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தி.மு.க அரசு குறுவை தொகுப்பை திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும். 14.6.2024 திமுக அரசால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பில் பெரும்பகுதி விதை நெல் மானியம் மற்றும் தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாசனத்திற்கு தண்ணீரே இல்லாத நிலையில், விவசாயிகள் இந்த விதை நெல்லை வாங்கி எங்கே நாற்றங்கால் தயார் செய்வார்கள் என்ற அடிப்படை யோசனை கூட இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க அரசிற்கு இல்லை.

எங்களது ஆட்சியில் மழையும், பாசன நீரும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டபோது, குறுவை சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு முழுமையாகச் செய்யப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இந்த திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறுவை சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு செய்யவில்லை. குறிப்பாக, சென்ற ஆண்டு குறுவை சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு செய்யப்படாததால் ஏக்கர் ஒன்றுக்குப் பயிர்க் காப்பீட்டு நிவாரணமாக ரூ. 35 ஆயிரம் கிடைக்காமலும், பயிர் பாதிப்புக்கு ஏற்ப காப்பீட்டு நிவாரணம் பெற முடியாமலும், டெல்டா விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். 

எனவே, தி.மு.க அரசு அறிவித்துள்ள குறுவைத் தொகுப்பு, தாங்கள் வகித்து வரும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, தமிழ் நாடு நலன் - குறிப்பாக டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, நமக்கு உரிய பங்கு நீரைப் பெறத் தவறிய தங்களது குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பு வேலைதான் இந்த குறுவைத் தொகுப்பு அறிவிப்பு. இன்றைய அளவில், டெல்டா விவசாயிகளினுடைய தேவை என்ன என்பதை கண்டுகொள்ளாமல், அவசர கோலத்தில் இந்த குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சொற்ப நிதியான ரூ. 78.67 கோடியில், 24.50 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம் யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் உள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது. அவர்களின் துயரத்தைப் போக்கவும் முடியாது. இதுவும் தி.மு.க அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களில் ஒன்று. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முதல்வர் பதவி விலக வேண்டும்' - ஆர்ப்பாட்டத்தை அறிவித்த அதிமுக

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
AIADMK announced the protest 'cheif minister must resign'

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 42 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

AIADMK announced the protest 'cheif minister must resign'

''இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இந்தநிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து ஜூன் 24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி வருவாய் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

Next Story

“அதிகார பலமிக்கவர்களின் ஆதரவோடு சாராய விற்பனை நடக்கிறது” - இ.பி.எஸ்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
EPS alleges Liquor sale is going on with the support of powerful people

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “விஷச் சாராய மரணம் வேதனை அளிக்கிறது. இவ்வளவு அதிகமான நபர்கள் உயிரிழந்த செய்தி வேதனையை ஏற்படுத்துகிறது. கள்ளச்சாராயம் குடித்து மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவருமே மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள். கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்ற இடத்திற்கு அருகில் தான் காவல் நிலையம் இருக்கிறது. காவல் நிலையம் அருகிலேயே சாராயம் விற்பனை என்றால் ஆட்சி அதிகாரம் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். 

ஆளுங்கட்சி மற்றும் அதிகார பலமிக்கவர்களின் ஆதரவுடன்தான் இந்தக் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது. மிகப்பெரிய கும்பல் இதற்குப் பின்னால் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. முதலில் வீர வசனம் பேசுகிறார்கள். சம்பவம் முடிந்த பிறகு அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஏற்கெனவே நடந்த சம்பவத்தையும் சிபிசிஐடி விசாரித்தது. அந்த வழக்கு என்னவானது?. கடந்த ஆண்டு நடந்த கள்ளச்சாராய மரண வழக்கில் யாரெல்லாம் கைது செய்யப்பட்டனர் என்பது கூட தெரியவில்லை. கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்திருந்தால் பலரைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், இந்த மரணத்தை வயிற்றுப்போக்கு, வயிற்று வலி என முன்னாள் ஆட்சியல் பச்சைப் பொய் கூறினார். இந்த மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. மக்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை” எனக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.