பாஜகவின் வாசனை வந்தாலே அவர்களுடன் மோதமாட்டார் எடப்பாடி. ஆனால், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுடன் இப்பொழுது மோதிக்கொண்டிருக்கிறார். இந்த எச்.ராஜா VS எடப்பாடி மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களையெல்லாம் இந்து அறநிலையத்துறையின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும், அவற்றை அந்தெந்த ஊர்களில் உள்ள இந்து பிரமுகர்களின் பராமரிப்பில் விட வேண்டும் என்பது பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜாவின் கருத்து.
அதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கும், சிலை கடத்தல் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே நடக்கும் மோதலை எச்.ராஜா பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சிலை கடத்தல் பிரிவு போலீசார், கைது செய்வதை நிறுத்த நினைத்த எடப்பாடி பிறப்பித்த உத்தரவுகளை பொன்.மாணிக்கவேல் மீறினார். அதனால் பொன்.மாணிக்கவேலுவுக்கும் எடப்பாடிக்கும் மோதல் உருவானது. அதை கோர்ட் உதவியுடன் முறியடித்தார் பொன்.மாணிக்கவேல்.
இந்த விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலுக்கு ஆதரவாக எச்.ராஜா முழக்க மிட்டார். இதனால் கடுப்படைந்த எடப்பாடி, சிலை கடத்தல் பிரிவில் வேலை பார்க்கும் பொன்.மாணிக்கவேலுக்கு மிக நெருக்கமான இளங்கோ என்கிற டி.எஸ்.பி. உள்பட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க வைத்துள்ளார்.
இதுவரை 24 வழக்குகள் பொன்.மாணிக்கவேல் மேற்பார்வையில் சிலை கடத்தல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எல்லாம் விளம்பரத்திற்காகவும் செய்திகளில் அடிபடுவதற்காகவும் பொன்.மாணிக்கவேல் செய்யும் வேலை என பரபரப்பான புகாரை கொடுத்துள்ளனர்.
அத்துடன் பொன்.மாணிக்கவேலுவுக்கு கீழ் வேலை செய்யும் 60 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளது காவல்துறை. இதை நான் விடமாட்டேன். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என எச்.ராஜா டிஜிபியிடம் ஆவேசமாக பொங்கியுள்ளார்.
அவர் எங்க வேணுமானாலும் போகட்டும், எச்.ராஜாவின் பேச்சை கண்டுகொள்ளாதீர்கள் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.