நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி..
''தேசிய அரசியலில் எப்பொழுதுமே நாட்டினுடைய நலம் கருதி தேசிய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுகிறோம். அதனடிப்படையில் செயல்படுவோம். அப்பொழுதுதான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் கட்சி நடத்துகிறோம். ஆனால் அதற்கு தேவையான உதவிகளைத் தேசிய அளவிலிருந்தால் தான் பெறமுடியும். (செய்தியாளர்களை நோக்கி) நீங்கள் அப்படிதான் எதையாவது போட்டு வாங்க முடியுமா என்று பார்ப்பீர்கள். அது நடக்காது.
எங்கள் குழந்தை எங்களுக்கு முக்கியம். அவரவர் குழந்தை அவரவர்களுக்கு முக்கியம். அவரவர்கள் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். எப்படி நமது குழந்தைகள் ஆரோக்கியமா இருக்கணும், நல்லா படிக்க வைக்கனும், அந்த குழந்தை எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அதேபோல் ஒவ்வொரு கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளும், அந்த கட்சி தலைவர்களும் அவர்களுடைய குழந்தைபோல் தான் பார்ப்பார்கள். நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார். யூடியூபில் போட்டு விட்டார்கள். அதோடு பிரச்சனை எல்லாம் முடிந்தது. தவறு செய்யாத மனிதனே கிடையாது. தவறு செய்த பிறகு அதை எண்ணி வருத்தம் தெரிவித்தால் அதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்க வேண்டும். அந்த மனப்பக்குவம் எங்களுக்கு இருக்கிறது''என்றார்.