Edappadi Palanisamy has alleged that there malpractice procurement sugarcane

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதலுக்குவிவசாயிகளுக்கு வழங்க அரசால்ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடக் குறைவாக அதிகாரிகளும், இடைத்தரகர்களும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பொங்கலுக்கு செங்கரும்பு வழங்கப்படமாட்டாது என்று இந்த திமுக அரசு அறிவித்ததையொட்டி, வருகின்ற தைப்பொங்கலுக்கு, அம்மாவின் ஆட்சிக்காலத்தில் வழங்கியதைப் போல், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் என்றும், செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதேபோல், செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினர்.

Advertisment

இந்த அரசு எங்களது தொடர் கோரிக்கையை அடுத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசால்ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33ரூபாய். ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த விடியா அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு அறிவித்த கரும்புக்கான முழுத்தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த திமுக அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களைப் பயன்படுத்துவது போன்ற திமுக அரசின் விவசாய விரோதச் செயல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.