சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமி ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது,
நான் முதல்-அமைச்சராகி 2¼ ஆண்டுகள் ஆகிறது. இதுவரை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் என்னிடம் மனு கொடுத்ததில்லை. இனிமேலும் கொடுக்க மாட்டார்கள். அப்படியிருக்கும் போது இங்கு அவர்கள் வெற்றி பெற்றால் எண்ணிக்கை வேண்டுமானால் கூடும். அதாவது 88-ல் இருந்து 89 ஆக அதிகரிக்கும். வேறு ஒன்றும் நடக்கப்போவது இல்லை.
இன்னொருத்தர் டி.டி.வி. தினகரன். அவர் யார் என்று அடையாளம் காட்டியதே அ.தி.மு.க. தான். இங்கு இருக்கிற தொண்டர்களின் உழைப்பால் அவர் அடையாளம் காட்டப்பட்டார். அவரை வெற்றி பெற வைத்த சின்னம் இரட்டைஇலை சின்னம். ஆனால் அந்த சின்னத்தை முடக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அவர். இயக்கத்தை உடைக்க வேண்டுமென்று கட்சிக்கு நெருக்கடி கொடுத்தவர் அவர். அதையெல்லாம் தவிடு பொடியாக்கியது இந்த அரசு. அவர் கண்ட கனவு எல்லாம் நனவாகவில்லை. இதனால் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து விட்டார். இந்த கட்சியை உடைக்கவேண்டும் என்று பார்த்தார்.
தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்து இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று சதி திட்டத்தை தீட்டியவர் அவர். அவருக்கு உடந்தையாக இருந்தவர் இன்றைய தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி. அவர் 18 எம்.எல்.ஏ.க்களுடன் பிரிந்து சென்றார். ஆனால் அவர் இப்போது தி.மு.க.வுக்கு சென்று விட்டார். ஆனால் இன்று அ.ம.மு.க. என்று ஒரு கட்சியை தொடங்கி அதன் தலைவராகி இருக்கிறார் டி.டி.வி. தினகரன். சூலூர் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றியை தடுக்க வேண்டும் என்று தான் டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்டவர் அவர். இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணமான அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்று நினைக்கிற டி.டி.வி. தினகரனுக்கு வருகிற தேர்தலில் தகுந்த பாடத்தை நீங்கள் புகட்ட வேண்டும்.
அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியும். அதற்கு நானே உதாரணம். தி.மு.க.கவில் வர முடியுமா?. கலைஞர், கலைருக்கு பின்னர் ஸ்டாலின், அதன்பிறகு உதயநிதி. வாரிசு அரசியல் அங்கு நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு ஒரு காலத்தில் உயர்ந்த பதவி நிச்சயம் கிடைக்கும். அத்தகைய சிறப்பான கட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இந்த கட்சியை உடைத்து எப்படியாவது முதல்-அமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று ஸ்டாலின் துடித்தார். மக்களின் ஆதரவுடன் அனைத்தையும் முறியடித்துள்ளோம். அந்த எரிச்சலில்தான் ஸ்டாலின் என்னன்னவோ பேசுகிறார். இவ்வாறு பேசினார்.