அதிமுகவில் ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என அக்கட்சி இரண்டாக பிரிந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இ.பி.எஸ். பக்கம் நின்றார். ஆனால், அவரின் சமீபகால நடவடிக்கையால் இ.பி.எஸ். அவரை கட்சியில் ஓரங்கட்டிவருவதாக அக்கட்சியினர் சிலர் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையிலேயே, நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கு அதிமுக தரப்பில் தனக்கோ அல்லது தனது மகனுக்கோ சீட் வேண்டும் எனக் கேட்ட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று நடந்த காயிதே மில்லத் நினைவு நாள் விழாவில், நினைவிடத்தில் ஓ.பி.எஸ். மரியாதை செய்தார். அப்போது உடன் இருந்தவர்களால் ஜெயக்குமார் ஓரங்கட்டுபட்டு பின்னுக்கு தள்ளப்பட்டார்.
இந்த விவகாரத்தை ஜெயக்குமார், இ.பி.எஸிடம் எடுத்துசென்றிருக்கிறார். இதனைக் கேட்ட இ.பி.எஸ், கட்சியின் நிலை தற்போது சரியில்லை என வருத்தப்பட்டாராம். மேலும், சென்னையில் இருந்த ஒரே அமைச்சர் நீங்கள் தான், உங்களை தவிர வேறு யாரையும் இங்கு வளரவிடவில்லை. அப்படியிருக்கையில் உள்ளாட்சி தேர்தல் வேலையில் தொய்வு ஏற்பட்டதால் அதிமுக சென்னையை கூட இழந்தது என்று வருத்தப்பட்டாராம் எடப்பாடி என அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் அதிமுகவில் நடக்கும் இந்தச் சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெயக்குமாருக்கு வாய்ப்பு கேள்விக்குறிதான் என்கிறார்கள் அவர் கட்சியினரே.