Skip to main content

யாருமே அமைச்சராக இருக்க முடியாது: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
narendra modi - Edappadi K. Palaniswami



பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 
 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமானப் போக்குவரத்து தொடங்கவும் கோரி உள்ளேன். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினேன். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தினேன். சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்கவும் கோரி உள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன். உள்ளாட்சித்துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் நிரந்தர கப்பல்படை தளம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன். காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்ததோடு, மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளேன். 
 


தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன. அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று உணர்வு வரவில்லையா?. 
 

யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். வழக்கின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். யார் பெட்டிசன் கொடுத்தாலும் பதவி விலக வேண்டும் என்றால், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் யாருமே அமைச்சராக இருக்க முடியாது. 
 

மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டீர்களே?
 

யார் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டது. நீங்கள் தவறான தகவலை சொல்லுகிறீர்கள். அண்மையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைப்பெற்றது. அதில் 93 சதவீதம் வெற்றிப்பெற்றிருக்கிறோம். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் செல்வாக்கு இழந்திருந்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் தேந்தெடுக்கப்பட்டிருப்பார்களா? இது தவறான செய்தி. 
 

டிடிவி தினகரன் ஓ.பி.எஸ்ஸை சந்தித்தாக கூறியுள்ளார். அதற்கு ஓ.பி.எஸ். சந்தித்தது உண்மைதான் என்று கூறியிருக்கிறாரே? இவர்கள் சந்தித்தது உங்களுக்கு தெரியுமா? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

டிடிவி தினகரன் ஊடகங்கள் வாயிலாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு துணை முதல் அமைச்சர் தெளிவான விளக்கத்தை ஊடங்களை அழைத்து தெரிவித்துவிட்டார். அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்படுமா?
 

இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. அறிவித்தப் பிறகு யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள், அதற்கு தக்கவாறு எங்கள் கட்சி முடிவு எடுக்கும். 
 

இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம் என்ன?
 

காரணத்தைத்தான் தெளிவாக சொல்லிவிட்டார்களே. இது தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டியது. இது நாங்கள் முடிவு எடுப்பது அல்ல. இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்