தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 14 ந் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம் ஆத்தூரில் 13ந் தேதி அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் மிகுந்த கோபத்தில் பேசியதாவது, "தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மழையைக் கண்டோ, இந்த அரசைக் கண்டோ பயப்படுகிற கூட்டம் அதிமுக அல்ல. நாளைய தினம் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது. என்ன நடக்கிறது முடிசூட்டு விழா நடக்கிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்; அவருக்கு நாளைக்கு முடிசூட்டு விழா நடக்கிறது.
கருணாநிதி அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். அவருக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதியை திமுகவின் தலைவர்களில் ஒருவராகக் கொண்டு வருவதற்குத்தான் அந்த முடிசூட்டு விழா. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா என்ன? ஏற்கனவே எல்லாத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராகச் செயல்படுவார். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்; வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஏனென்றால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாநிலத்துக்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார். ஆனால், தமிழகத்துக்கு 4 முதலமைச்சர்கள் உள்ளனர். மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய மருமகன் ஆகியோர்தான் 4 முதலமைச்சர்கள். திமுக என்றால் குடும்ப ஆட்சி; குடும்ப கட்சி; அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் விசுவாசமாக இருந்தால், உழைப்பவர் எவராக இருந்தாலும் அவருடைய வீட்டுக் கதவைத் தட்டி பதவி கொடுக்கின்ற கட்சி அதிமுக. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட எம்.எல்.ஏ, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர் கூட ஆகக்கூடிய கட்சி அதிமுக.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சிற்கு அதே கொங்கு சமூகத்தில் உள்ள, தி.மு.க.வின் நெசவாளர் அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் பதில் கூறும்போது,
"எடப்பாடி பழனிசாமி என்பவர் யார்? அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் அதன் முதல்வராக இருந்த ஜெயலலிதா இருக்கும்போது இந்த எடப்பாடி பழனிசாமி யார் என்று யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த பிறகு அவருடைய பினாமியாகச் செயல்பட்ட சசிகலா தனக்கு விசுவாசம் மிக்க ஒரு பினாமியாக இந்த எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர்த்தி விட்டு, அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைக்குச் சென்றார். இந்த எடப்பாடி பழனிசாமி எந்தப் பின்புலமும் இல்லாதவர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லோரையும் கொள்ளை அடிக்க வைத்து திருட வைத்து மூன்று ஆண்டுகள் அந்த ஆட்சியை நடத்தினார். அப்பொழுது அவருடைய மகன் அந்தக் குடும்பம் என அனைவரையும் கொள்ளை அடிக்க வைத்தவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி. இவர் கூறுவது போல வாரிசு அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்காக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் காலத்தில் தொடங்கி தொடர்ந்து அரசியலில் இயங்கக்கூடிய அனைவரும் அவர்களுக்கானத் தகுதியைப் பெற்று வருகிறார்கள். தற்போது முதலமைச்சராக இருக்கிற தலைவர் தளபதி அவர்களும் சிறுவயது முதல் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதனுடைய போராட்டங்களில் பயணித்து அவர் தகுதி அடிப்படையில்,
இப்போது முதல்வராக இருக்கிறார். திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் எனக்குத் தெரிந்து இரண்டு மூன்று தேர்தலில் அவர் மிகுந்த சிரமங்களைத் தாங்கி தமிழ்நாடு முழுக்க ஊர் ஊராகச் சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவர். இப்போது எம்எல்ஏக்கள் எம்பிக்களாக இருப்பவர்கள் பலருக்கும் அவருடைய உழைப்பின் மூலம் பயன்பெற்றுத் தேர்வானவர்கள்.
இந்த நிலையில் அரசியலில் ஒவ்வொன்றாகத் தொடங்கி மேலுக்கு வந்த திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது கொடுக்கப்படுகிற மரியாதை இதுவே காலம் தாழ்ந்தது. இந்த நிலையில் இதைப் பற்றிப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை. அந்த எடப்பாடி பழனிச்சாமி யார்...? அந்த எடப்பாடி பழனிசாமி எந்தப் பின்புலமும் இல்லாமல் இவ்வளவு தூரம் பேசுவது கேவலமானது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிப் பேசத் தகுதி இல்லாத நபர் " என்றார்"