தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டு அலுவலக பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து புதிய மாவட்டமாக உருவெடுக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுகவில் பதவிக்கு உட்கட்சி பூசல் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் இருக்கும் முன்னாள் அமைச்சரை ஓரம் கட்ட தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் திட்டம் போடுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் எடப்பாடியிடம் நல்ல பெயரை எடுத்திருக்கும் எம்.எல்.ஏ ஒருவர் கள்ளக்குறிச்சி தொகுதியில் மாவட்ட செயலாளர் பதவி மற்றும் அமைச்சர் பதவி வாங்கி விட்டு அதிகாரம் மிக்க நபராக மாவட்டத்தில் வரலாம் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. அந்த எம்.எல்.ஏ.விற்கு முன்னாள் அமைச்சரும், தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகின்றனர். கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கு பதவி கொடுக்கும் திட்டத்தை தற்போதைக்கு எடப்பாடி நிறுத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த தொகுதி மக்களிடமும் அந்த எம்.எல்.ஏ. விற்கு அதிக எதிர்ப்பு இருப்பதால் பதவி கொடுக்கும் எண்ணத்தை எடப்பாடி மாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றும் கட்சிக்குள் பதவிக்காக நடக்கும் உட்கட்சி பூசலால் எடப்பாடி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.