தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு (09/10/2021) நடைபெற்றது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ அகிய இருவரும் தங்கள் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்குகளைச் செலுத்தினார்கள். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ பேசியதாவது, "என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. 56 ஆண்டுக்கால அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன்.
28 ஆண்டுக்காலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்கள், 5 1/2 ஆண்டுக்காலம் ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அதனால் அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. எனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவது எனக்குத் துளி அளவு கூட விருப்பமில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20ஆம் தேதி நடைபெறும் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவு செய்யும். அதில் அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதற்கு நான் முழு மனதுடன் கட்டுப்படுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. மதிமுக வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி தேர்தலில் மதிமுகவிற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த துரைவைகோவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 56 ஆண்டு கால பொது வாழ்வில் பணியாற்றி வரும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் துரை வைகோவிற்கு மதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி தர வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.