குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை குடியரசு தலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க.,காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக நேற்றே அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்புவிடுத்திருந்த நிலையில் தற்பொழுது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு இபிஎஸ் மட்டும் அவரது ஆதரவாளர்கள் உடன் வந்துள்ளார். ஓபிஎஸ் இன்னும் வரவில்லை. இருப்பினும் திரௌபதி முர்முவை ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தனித்தனியாக சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன். அண்ணாமலை ஆகியோருக்கு மேடையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள், அதிமுக எம்.எல்ஏக்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.