தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை கடந்த தேர்தலை விட அதிகளவில் படித்த இளைஞர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மருத்துவர் அஸ்வினி சுகுமாரன் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதிய தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கேஎஸ் விஜயகுமார் நேரில் சென்று மருத்துவர் அஸ்வினிக்கு வாழ்த்து கூறியுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 2,547 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் என்ற சாதனையையும் அஸ்வினி படைத்து உள்ளார். வெற்றி பெற்று பொறுப்பேற்றது குறித்து டாக்டர் அஸ்வினி கூறும் போது, என்னுடைய ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில், சிறப்பான ஊராட்சி பணிகளை மேற்கொள்வேன். அதிலும் மருத்துவ சேவைகளையும் செய்ய போகிறேன்.அதோடு புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தருவேன். இ-சேவை மையத்தையும் அமைக்க போகிறேன். மாதம் ஒருமுறை ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திடவும் முடிவு செய்துள்ளேன் என்றார். இதனை தொடர்ந்து பலரும் மருத்துவர் அஸ்வினிக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.