ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது என குற்றம்சாட்டியும் இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் முகுல் வாஷ்னிக், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் இளங்கோவன் , மகளிர் அணி ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ‘’மத்திய பா.ஜ.க அரசு இந்தியாவை அந்நிய நாட்டுக்கு அடகு வைத்து விடுவார்கள். அதே போல தனியார் தொழில்அதிபர்களுக்கும் விற்றுவிட்டார்கள். சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. அரசியல் என்று வந்தால் மாலை மட்டும் விழாது. செருப்புகளும் வந்து விழும். 10 மாலைகள் வந்து விழுந்தால் ஒரு செருப்பாவது விழும். ஒரு செருப்பு வேண்டாம் விழுந்தால் எனக்கு இரண்டு செருப்பு விழ வேண்டும் என்று நினைப்பேன்.
2014-ம் ஆண்டு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இந்தப் போர் விமானம் ஒன்றுக்கு தலா 526 கோடி என மொத்தம் 126 ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு வந்த பி.ஜே.பி அரசு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு தலா 1,060 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் 41,000 கோடி ஊழல் செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த ஊழல் மத்திய அரசை வீட்டுக்கு அனுப்பும். வேண்டும். பாசிச ஆட்சி என்று சொன்னால்.. சிறை என்றால்... நான் தனியாக இல்ல எல்லோரும் சேர்ந்து சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். இந்த மத்திய அரசை விரட்ட வேண்டும்’’ என்றார்.