தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். இவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காலையில் தொடங்கிய இந்தச் சோதனை 7 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சோதனையில் இதுவரை 1.60 கோடி ரூபாய் பணம், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படும் சோதனை என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல் முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதா? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், 'கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் சோதனை என்பது திமுகவின் இந்த மாத கோட்டா. தமிழகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட நிலையில், நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, தங்கமணி ஆகியோரது இல்லங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.