திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை கட்சியின் பொருளாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையில் என்னென்ன அறிவிப்புகள் செய்யப்படும்? என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்தபடி இருந்தது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், “திமுகவின் தேர்தல் அறிக்கையை, 'கதாநாயகன்' என்று பொதுவாகச் சொல்லுவார்கள். ஆனால், நேற்று வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலே திமுகவின் கதாநாயகனாகப் பேசப்பட்டது. அந்த வகையில், இரண்டாவது கதாநாயகனாக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.
தேர்தல் அறிக்கையில், 500-க்கும் மேற்பட்ட புதிய புதிய அறிவிப்புகள் தேர்தல் வாக்குறுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள், அனைத்துத் தரப்பினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், 'திமுக தேர்தல் அறிக்கை - 2021' என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது எனில், அது திமுகவின் தேர்தல் அறிக்கையாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.