டிசம்பர் 23ஆம் தேதி நடக்கும் பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, திமுக நடத்தவிருக்கும் பேரணிக்கு, திமுக சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் விவாதித்தோம். நாட்டின் ஐனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, ஒற்றுமை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த இப்பேரணி உதவும் என கருதுகிறோம்.
எனவே இப்பேரணியில் பங்கேற்பது என மனிதநேய ஜனநாயக கட்சி முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் ஆயிரக்கணக்கனக்கான மஜகவினர் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டு நலன் கருதி சமூக நல இயக்கங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் என சகல தரப்பும் இப்பேரணியில் பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.