DMK prepares for assembly elections Important advice today

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகளை இந்த குழு மூலம் மேற்கொள்ளப்படும் என நேற்று (20.07.2024) அறிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் திமுக தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘ஒருங்கிணைப்புக்குழு’ அமைக்கப்படுகிறது. அதன்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் ஒருங்கினைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (21.07.2024) மாலை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத்தகவல் வெளியாகியுள்ளது.