காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பில் எந்த ஒரு ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய எம்.பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைவாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அக்டோபர் 24 ஆம் தேதி மறு விசாரணை வர இருக்கும் நிலையில், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், என சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏற்கனவே பட்டியலிட்டபடி அக்டோபர் 24-ந் தேதிதான் விசாரணை தொடங்கும் என உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கினை வேகமாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ கூறி வருவதால் இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்கிறதா என்ற கண்ணோட்டத்தில் திமுக வட்டாரங்கள் கவனித்து வருகின்றனர்.