திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் கடனை ரூபாய் 4.5 லட்சம் கோடியாக அதிகரித்தது தான் முதல்வர் பழனிசாமியின் சாதனை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்துள்ளது. கடன் வாங்கிய தொகையைக் கொண்டு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. என்.எல்.சி., ரயில்வே போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மத்திய அரசு பணிகளில் 90% பேர் வட மாநிலத்தவர்கள் உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மேம்படுத்தப்படும். சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில், தி.மு.க.வின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.