அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனும், பாமக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் மோதுகின்றனர். அமமுக சார்பில் பார்த்திபன் நிறுத்தப்பட்டுள்ளார். தொகுதியில் நீயா, நானா பார்த்துவிடுவோம் என ஜெகத்ரட்சகனும், மூர்த்தியும் கிராமம், கிராமமாக, ஒவ்வொரு தெருவுக்கும் சென்று வாக்கு கேட்கின்றனர்.
எம்.பி தேர்தல் களம் என்பது எம்.எல்.ஏ தேர்தல் களத்தைவிட வித்தியாசமானது. 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஒரு எம்.பி தொகுதி என்பதால் பெரும்பாலும் காரை விட்டு இறங்காமல் எம்.பி வேட்பாளர்கள் வாக்கு கேட்பர். அதுவும் தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருக்கும் என்பதால் ஒரு கிராமத்துக்கு ஒருமுறை வந்தால் மறுமுறை வரமாட்டார்கள். அந்தப் பகுதி கட்சியினர் மட்டுமே பிரச்சாரம் செய்வர். அரக்கோணம் தொகுதியை பொருத்தவரை திமுக, பாமக-வை சேர்ந்த வேட்பாளர்கள் தொகுதியை இரண்டு முறை வலம் வந்துவிட்டார்கள். வீக்காக உள்ள பகுதிக்கு மீண்டும் மீண்டும் பயணம் செய்கிறார்கள்.
அரக்கோணம் தொகுதி தேர்தல் பணியை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவுமான காந்தி தான் கவனிக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் தனது அப்பா ஜெகத்ரட்சகனுக்காக அவரது மகள் டாக்டர் நிஷாஇளமாறனுடன், காந்தி மனைவியும் விஸ்வாஸ் என்கிற அமைப்பை வைத்து நடத்தும் கமலாகாந்தியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை, ஆற்காடு, விஷாரம், சோளிங்கர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், பெண்கள் அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், சிறுபான்மையின நிறுவனங்களுக்கு செல்லும் இந்த இரண்டு பெண்மணிகளும், திமுகவுக்கு வாக்களியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாகயிருக்கும் என்றும், திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துச்சொல்லி வாக்கு கேட்கின்றனர். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் எங்களிடம் கேளுங்கள் எனச்சொல்வது பெண்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
தினமும் ஒவ்வொரு தொழிற்சாலை, ஒவ்வொரு அமைப்பு என இவர்கள் தனி ரூட் போட்டு பிரச்சாரம் செய்வது புதுமையாக இருப்பதோடு, இந்த டெக்னிக் நமக்கு வராமல் போய்விட்டதே என ஆளும்கட்சி கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் மூர்த்தி தவிக்கிறார்.
இந்த நிறுவனங்களுக்கு ஆளும்கட்சியான அதிமுக சார்பில் மறைமுகமாக திமுக வேட்பாளர் பிரச்சாரத்துக்கு அனுமதிக்காதீர்கள் என மிரட்டலும் விடப்படுகிறது எனக் கூறப்படுகிறது. அவர்களோ, நீங்களும் வந்து பிரச்சாரம் செய்துகொள்ளுங்கள். யாருக்கு வாக்களிப்பது என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்துகொள்வார்கள் எனச் சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதை செய்ய அதிமுக கூட்டணி பெரியளவில் முயலவில்லை என்கின்றனர்.