பொதுவாக, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுக்கு ஆளுநர் மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பொது மேடைகளில் தமிழக ஆளுநர் பேசும் அரசியல் மற்றும் ஏனையப் பொதுக்கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக விழாவில் பேசிய தமிழக ஆளுநர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை. ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதனைத் தவறாக மொழிபெயர்த்துள்ளார். மேலும், திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்" எனப் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அதுமட்டுமில்லாமல், கடந்த வாரம் கோவையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், "கோவையில் நடந்தது திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும். அதை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. பயங்கரவாதத்தை உருவாக்கும் இடமாக கோவை உள்ளது. கோவை தாக்குதலுக்குப் பின் பெரிய திட்டங்கள் இருந்துள்ளன. இந்த சம்பவத்தை உரிய நேரத்தில் என்.ஐ.ஏ.விடம் விசாரணைக்குக் கொடுத்திருக்க வேண்டும். பயங்கரவாதம் மூலம் மக்களை விரக்தி அடையச் செய்வதே அவர்களின் நோக்கம். தமிழகக் காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட வைக்க அனுமதிக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார். இப்படி தொடர்ந்து ஆளுநர் தனது பதவி விதிகளை மீறி பேசி வருவதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில், "தமிழக ஆளுநர் ரவி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி விட்டு பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும். சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் என எதைப் பற்றி பேசினாலும் ஆளுநர் கூறும் கருத்துக்கள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கிறது. பாஜக தலைமையை மகிழ்விக்க இப்படி பேசுவதாக இருந்தால் ஆளுநர் ரவி பதவி விலகி விட்டு இதுபோன்ற கருத்துக்களை சொல்லட்டும்" என திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, தவாக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டாக கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க இருக்கிறோம். அதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் நாளைக்குள் அறிவாலயம் வந்து ஆளுநர் தொடர்பான மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்" என அழைப்பு விடுத்திருக்கிறார்.