தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக இருந்தபோது இளைஞரணியின் முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு ஒரு நாள் மாநாடாக சேலத்தில் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இளைஞரணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன்.
இந்த மாநாட்டில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. காலை 9 மணியளவில் கட்சியின் கொடியை ஏற்ற உள்ளார். மாலை ஆறு மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.