![DMK Congress which was knocked out in the first meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/CTmh2Hoclw0ibIvQoTFsuVxWvxbJht8ZzlJfSvzkXMw/1711041411/sites/default/files/inline-images/aranthangi-art-1.jpg)
ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.
![DMK Congress which was knocked out in the first meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/lPjcMspgs09DeP1-qUXHeYyq6D-rIaiXkW5dWjTn7zA/1711041436/sites/default/files/inline-images/aranthangi-art-2.jpg)
தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.
அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.