நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, திமு.க.ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை கூறி வேப்பந்தட்டை பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து பேசுகையில், “இது என் சொந்த ஊர், எப்போதும் வருவேன், இந்த பகுதியில் விளையும் மக்காச்சோளத்திற்கு மதிப்புக் கூட்டு செய்யப்படும். எனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த பிரசார நிகழ்வில் பெரம்பலூர் தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி செயலாளர் செல்லதுரை,ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.