முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை தினத்தை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை அசோக் நகரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இறுதி இலக்காகத் தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதே தமிழ் மக்களின் முன்னால் இருக்கும் ஒரு சவால் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது. அதற்கு உடனடித்தேவை உலகத் தமிழர்களை ஒருங்கிணைப்பது தான். உலகத் தமிழர்களிடையே இருக்கக்கூடிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி இடைவெளியை ஏற்படுத்தாமல் ஒற்றுமை கூறுகளைச் செழுமைப்படுத்தி ஒருங்கிணைந்து களமாடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்த சர்வதேச இனப் படுகொலை நாளில் உறுதி ஏற்போம். இதுவே விசிகவின் வேண்டுகோளாகும்.
முதலில் தமிழ்ச் சமூகங்கள் தங்களுக்கு இடையே உள்ள விமர்சனங்களைக் கைவிட வேண்டும். ஈழத் தமிழர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களின் நலன்களை மட்டுமே முன்னிறுத்திக் கைகோர்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. விடுதலை சிறுத்தைகளுக்கு மட்டுமல்ல. இதில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைத்து தமிழ்நாட்டுக் கட்சிகள், அரசியல் சார்பற்ற அமைப்புகள் இந்த களத்தில் இத்தகைய ஒருங்கிணைவை முன்னெடுக்க முன்வரவேண்டும்''என்றார்.