மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, கேரளா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. சில மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், கரோனா தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தே.மு.தி.க. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எல்.கே.சுதீஷ் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் சூடுபிடித்துள்ள சூழலில், எல்.கே.சுதீஷ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.