Skip to main content

ட்விட்டர் ஐடி முடக்கம்; விதிமுறைகளை மீறினாரா சீமான்?

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Disable Twitter ID; Did Seaman break the rules?

 

இந்தியாவை பொறுத்தவரை 1.88 கோடிக்கும் அதிகமான மக்கள் ட்விட்டர் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகமாகவும் ட்விட்டர் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக அரசியல் கட்சியினரின், திரைப் பிரபலங்கள் போன்றோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப், கங்கனா ராணாவத், ராகுல்காந்தி, 6க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அப்போது மத்திய அரசை காங்கிரஸ் குற்றம் சொன்னது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் செயல் என்றும் காங்கிரஸ் கூறியது.

 

பொதுவாக ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறது என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பொதுமக்களுக்கு தவறான தகவல்களை அளிப்பது, சர்ச்சையான பதிவுகளைப் பதிவிட்டு இருபிரிவு மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவது, சர்ச்சைக்குரிய புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டால் கணக்கு 24 மணி நேரத்துக்கு முடக்கப்படும். ஒரு ஐடி ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டாலும் அது மீட்கப்படும் வரை இடைநீக்கம் செய்யப்படும். ட்விட்டர் விதிகளை மீறி ஒரு ஐடி இயங்குகிறது என்றாலும் அந்த ஐடி முடக்கப்படும். தவறான செயல்களில் ஈடுபடும்போது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கணக்குகள் நிறுத்தி வைக்கப்படும்.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 20 பேரின் ட்விட்டர் ஐடிக்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி ஆளும் மாநில அரசுகளையும் மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான். தான் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்தும், கட்சி சார்ந்த அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுக்கு எதிரான தனது கண்டன அறிக்கைகளையும் ட்விட்டரில் பதிவிடுகிறார். இந்நிலையில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கட்சியினர் 20 பேரின் ஐடிக்களும் முடக்கப்பட்டுள்ளன. 

 

சைபர் க்ரைம் வல்லுநர்கள் இது குறித்து கூறுகையில், ‘ட்விட்டர் கணக்கை முடக்க மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசு குறிப்பிட்ட 10 நிறுவனங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட ஐடிக்கள் குறித்து ட்விட்டரிடம் புகார் அளித்தால் புகாரின் மேல் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட கணக்கை முடக்க வேண்டும் என்பது விதி. ஐடியின் உரிமையாளர் ட்விட்டருக்கு தனது தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லலாம். கோரிக்கையை ஏற்று கணக்கை முடக்கியதில் இருந்து நீக்கவும் முழுமையாக கணக்கை முடக்குவதும் ட்விட்டரின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்கின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் தமது தரப்பு நியாயத்தை ட்விட்டருக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு ட்விட்டர் பதில் அளிக்கும் பட்சத்தில் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படலாம்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லோரும் மன்சூர் அலிகானை எதிர்ப்பது கஷ்டமாக இருக்கிறது” - சீமான் வருத்தம்

 

seeman about mansoor ali khan trisha issue

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியதாவது, லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

 

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார். 

 

இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். என் கட்சியில் வேட்பாளராக கூட நின்றிருக்கிறார். இன உணர்வு மிக்க ஒரு தமிழர். அவரை எல்லோரும் சேர்ந்து எதிர்க்கும் போது மனசு கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதில் எந்த கருத்தும் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் என்ன பேசினார் என்றே நான் கேட்கவில்லை. 

 

எனக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்தியிருக்க வேண்டும் என்ற நோக்கில் பேசியிருக்க மாட்டார். இயற்கையாகவே அவர் வேடிக்கையாக பேசுபவர். அதனால் அது மாதிரி நகைச்சுவையாக பேசியிருப்பார். அதை இவ்வுளவு தூரம் எடுத்து விவாதிக்க வேண்டுமா என்பது தான் யோசிக்க தோன்றுகிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் சங்கம் இதுவரை யார் பக்கம் நின்றிருக்கிறது. சக நடிகர்களின் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருந்த போது, படத்தை வெளியிட விடாமல் தடுத்த போது சங்கம் பேசியிருக்கா?  விஜய்க்கு பிரச்சனை வரும் போது பேசுனுச்சா. அவரை விட சிறந்த நடிகர் வேணுமா?  நடிகர்களுக்கென்று தமிழ்நாட்டில் கேரளா போல , கர்நாடகா போல உறுதியான ஒரு சங்கம் இருக்கா?  இவ்வளவு நாள் இயங்குச்சா இல்லையானே தெரியல” என்றார்.  

 

மேலும் தேசிய மகளிர் ஆணையம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மணிப்பூரில் இரண்டு பெண்களை ஆடைகளின்றி வன்கொடுமை செய்து கொலை செய்த போது மகளிர் ஆணையம் தலையிட்டதா?  8 வயது பச்சிளங் குழந்தை ஆசிஃபா கொடுமைக்கு பேசியதா? முதலில் மகளிர் ஆணையம் உயிர்ப்போடு இருக்கா?  தமிழ்நாட்டில் எத்தனை வன்கொடுமைகள் நடந்திருக்கு? அதற்கெல்லாம் பேசியிருக்கா?” என கோவமாக பல கேள்விகளை முன் வைத்துப் பேசினார். மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து செயல்பட்டு பின்பு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

Next Story

“நேற்று ஈழத்தில்; இன்று பாலஸ்தீனத்தில்” - 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குறித்து சீமான்

 

seeman about jigarthanda double x

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்படத்தை பாராட்டி இரண்டு பக்க அறிக்கையை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “பூர்வக்குடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம். உலகெங்கும் பூர்வக்குடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய வாழ்வியல் சிக்கலை கதைக்களமாக கொண்டு, தற்காலச் சூழலில் சொல்லப்பட வேண்டிய மிக அழுத்தமான கருத்தினை மிக அழகாகத் திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் தம்பி கார்த்திக் சுப்புராஜ். 

 

'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது எந்த அளவிற்கு உண்மையோ,  காடின்றி அமையாது நாடு என்பதும் அதே அளவிற்கு உண்மை. அதனாலேயே மற்றொரு குறளில் ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ என்கிறார். அந்த வகையில் காடு மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமானது என்பதனை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமான உரையாடல்களோடு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச் சிறப்பானது.

 

இதை வெறும் படம் என்று கூறிவிட முடியாது. நம் அனைவருக்குமான பாடம். நாம் காட்டுவாசி, ஆதிவாசி என்றெல்லாம் வாய்மொழியாக கூறிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் மலைவாழ் மக்கள். நம் மண்ணின் தொல்குடி மக்கள். காடும், காடு சார்ந்த நிலத்திற்கும் பாதுகாப்பு அரணே அவர்கள்தான். ஆனால் இன்றைக்கு வளவேட்டைக்காக முதலில் பலியிடப்படுவதும் அம்மக்கள்தான். தண்டகாரண்யத்தில் பச்சை வேட்டை என்றொரு திட்டத்தைத் தொடங்கி அங்கு இருக்கும் 250 இலட்சம் கோடி மதிப்பிலான வளங்களை எடுப்பதற்காக அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்த முனைந்தபோது, உங்களுக்கு இது காடு, எங்களுக்கு இது வீடு இதை விட்டு செல்லமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அந்த கருத்தைத்தான் இத்திரைப்படமும் வலியுறுத்துகிறது.

 

என் மண், என் நிலம், என்னுடைய வாழ்விடம் அதைவிட்டு ஒருபோதும் செல்ல முடியாது. உயிர் போனாலும் இந்த மண்ணில்தான் என்று படம் பேசும் கருத்தில்தான் ஒவ்வொரு தேசிய இனங்களின் போராட்டமும் தொடங்கியது. அதுதான் நேற்று ஈழத்தில் நடந்தது; இன்று பாலஸ்தீனத்திலும் நடைபெறுகிறது. 'சூழலியலின் தாய்' வங்காரி மாதாய் உலகெங்கிலும் போர் என்பதே வள வேட்டைக்காகத்தான் நடைபெறுகிறது என்கிறார். அப்பேருண்மையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திரைமொழியில் அழுத்தமாகச் சொல்ல முடிந்தது என்பதே இத்திரைப்படத்தின் மிகப்பெரிய சாதனையாகும். தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிபெயர்த்துள்ளதைக் கண்டபோது, இத்திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது” என்றார். சீமானின் பாராட்டிற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.