திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம். சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.