தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறும் 16வது பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதன்படி அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இன்னும் பல தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் வைத்துள்ளது. ‘அதற்கு காரணம் வேறு சில கட்சிகள் கூட்டணிக்கு வருகின்றன, அவை வந்தபின் அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கியது போக மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்’ என தினகரன் தரப்பில் கூறுகின்றனர்.
ஆனால், உண்மைக் காரணம் வேறு என்கிறார்கள் அமமுக மாநில நிர்வாகிகள். இதுபற்றி அவர்களிடம் நாம் பேசியபோது, சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அதிமுகவுடன் எப்படியும் இணைந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையில் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், சசிகலா துறவறம் என அறிவித்த பின் இங்குள்ள பலருக்கும் ஒருவித விரக்தி ஏற்பட்டது. அதேபோல் சீட் வேண்டும் என மனு தந்தவர்களுக்கு நீங்கள்தான் உங்கள் சொந்த பணத்தை வைத்து தொகுதிக்கான செலவை செய்ய வேண்டும். கட்சி எந்தவிதமான நிதியும் தராது எனக் கூறியுள்ளனர். இதனால் பலரும் எங்களுக்கு சீட் வேண்டாம் என ஒதுங்கி போகின்றனர்.
உதாரணத்திற்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பாலசுப்பிரமணியன். அதிமுக பிரிந்து அமமுக உருவானபோது தினகரன் பின்னால் சென்றதால், தனது எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிட்டது. 2019இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டது. அவர் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் சீட் வழங்க தினகரன் முடிவு செய்துள்ளார். ஆனால், பாலசுப்பிரமணி தனக்கு வேண்டாம், தொகுதிக்கு செலவு செய்ய தன்னிடம் பணம் இல்லை என கூறுவதாக தெரிகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதியில் அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன் அறிவிக்கப்பட்டுள்ளார். தன்னிடம் செலவு செய்ய நிதி இல்லை என தேர்தல் வேலையில் சுணக்கமாக உள்ளதாக அமமுகவினர் கூறுகின்றனர்.