சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல் என்றும், சசிகலா கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் அமமுகவினர் கலந்துகொள்ளக் கூடாது என தினகரன் தடை விதித்திருக்கிறார் என்றும் கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு அரசியலில் எதிரொலித்தபடி இருக்கிறது. இந்தச் சூழலில், இதுகுறித்து பேட்டியளித்த தினகரன், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலா ‘க்ளைம்’ (உரிமை) பண்ணிவருகிறார். அது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் இருக்கிறது. இந்த நிலையில், அமமுகவினர் கலந்துகொள்வது சட்டச் சிக்கலை உருவாக்கலாம் என்பதால் எங்கள் கட்சி நிர்வாகிகள் தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படி தினகரன் சொல்லியிருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் விருப்ப மனு வாங்குவதற்கான நிகழ்ச்சிகளில் சசிகலாவின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்திவருகின்றனர் அமமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள். தினகரன் சொல்வது உண்மையெனில், அவரது நிர்வாகிகள் சசிகலாவின் படத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதனால் சட்டச் சிக்கல்கள் உருவாகாதா? என்றெல்லாம் சர்ச்சைகள் எதிரொலிக்கச் செய்கின்றன.
இந்தச் சூழலில், அமமுகவின் முன்னாள் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “டி.டி.வி. தினகரன் திசை தெரியாமல் தடுமாறுகிறார்; தத்தளிக்கிறார். தமிழக அரசியலில் அவரை ஆதரித்து நான் பேசிய காலக்கட்டங்களில், அன்றைக்கு வெள்ளம்போல் வந்த இளைஞர்கள் கூட்டத்தில் இன்று ஒருவர் கூட தினகரனிடம் இல்லை. எல்லோரும் விலகிச் சென்றுவிட்டார்கள்.
ஒரு நம்பகத்தன்மை இல்லாத மனிதன் டி.டி.வி. தினகரன். அவர் என்ன நினைக்கிறார்? என்ன கருதுகிறார்? எப்படி பயணிக்கப் போகிறார்? என்பதை அவர் வெளிப்படையாக எப்போதும் சொன்னதில்லை. ஆகவே, இப்படி உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக நாடகமாடும் டி.டி.வி. தினகரன், இன்றைக்கு சசிகலா அம்மையாரின் படத்தைப் போட்ட விருப்ப மனு படிவத்தை விநியோகித்திருக்கிறார் என்றால், சசிகலா இல்லாமல் அவருடைய தயவும் தாட்சண்யமும் இல்லாமல் ஒரு நிமிடம் கூட அவரால் இயங்க முடியாது என்பது தற்போது உண்மையாகியிருக்கிறது.
அதே நேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக சசிகலா அம்மையார் முன்வருகிறபோது, அந்த நிகழ்ச்சிக்கு அமமுக நிர்வாகிகள் போகக் கூடாது என தடுக்கிறார். ஆகவே, வெளிப்படையாக, மிக கேவலமாக ரெட்டை வேடம் போடுகின்ற தினகரனை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை.
சசிகலாவின் படத்தை அச்சிடாமல் விருப்ப மனு படிவத்தைக் கொடுத்திருந்தால் விருப்ப மனுவைக் கூட ஒருத்தரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள். அமமுகவின் இன்றைய நிலைமை இதுதான் என்றால், நாளைக்கு அதிமுகவுக்கும் அந்த நிலைமைதான் வரும். அதனால், சசிகலா என்பவர் தவிர்க்க முடியாதவராக மிக சாதுர்யத்துடனும் சாணக்கியத்தனத்துடனும் அரசியல் செய்கிறார்.
அவர் இதுவரைக்கும் டி.டி.வி. தினகரனின் பெயரையோ, அமமுக பெயரையோ உச்சரிக்கவில்லை. நடந்து முடிந்த பொதுத்தேர்தலானாலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலானாலும் அமமுகவிற்கு ஆதரவு தாருங்கள் என ஒரு இடத்தில் கூட சசிகலா கேட்கவில்லை. ஆகவே, அதிமுகவுக்குத் தலைமை தாங்கக் கூடிய லட்சியத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிற சசிகலா அம்மையாருக்கு, டி.டி.வி. தினகரன் ஒரு சுமையாக இருக்கிறார்; ஒரு தடையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை.
ஆகவே, நிர்தாட்சியமாக, டி.டி.வி. தினகரனை நிராகரித்துவிட்டுப் பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா, தினகரனை அலட்சியப்படுத்துவது மட்டுமல்ல; அரசியலில் இருந்து தினகரனை அப்புறப்படுத்தவும் முன்வர வேண்டும். அப்போதுதான் சசிகலாவின் பயணம், அவரது இலக்கை எட்டுவதற்கு துணை நிற்கும்” என்றார் மிக அதிரடியாக.
தொடர்ந்து நம்மிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலாவின் உரிமை கோரும் முயற்சிக்கு சட்டச் சிக்கல் வந்துவிடக் கூடாது என தினகரன் சொல்வது, அரசியலில் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் தருகிற மரண வாக்குமூலம் அது. சசிகலா இவரை எப்போதும் சேர்த்துக்கொள்ள மாட்டார். அவரை தனது லட்சியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் கருத மாட்டார். அவருடைய பயணத்தில் ஒரு இடத்துக்கும் இனி அழைக்க மாட்டார். ஆகவே, டி.டி.வி. தினகரன் ஒரு அரசியல் அனாதை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியும்” என்று அணுகுண்டு போல வெடித்தார் நாஞ்சில் சம்பத்.