விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார் விருதுநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் உள்ள குடிநீர்ப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு அமைச்சர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடத்திட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார். மோடி வெளிநாடு பயணம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் பயணத்தை பற்றி கூறவில்லை. பொத்தாம் பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்வதால் மாநிலங்களுக்கு நன்மை கிடைக்காது எனப் பேசியிருக்கிறார். அவர் பிரதமர் மோடியைக் குற்றம் சொல்கிறார் என்றே நினைக்கிறேன்.
9 ஆண்டுகளாக பிரதமர் மோடி சுற்றாத ஊரே இல்லை. போகாத நாடே இல்லை. அவர் பேசாத பேச்சும் இல்லை. மோடி வெளிநாடுகளுக்குச் சென்று என்ன பெற்று வந்தார் என்று ஆர்.என்.ரவி கேட்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஆளுநர் பணியை விட பாஜக மாநிலத் தலைவர் செய்யும் பணியைப் போல் சர்ச்சைக்குரிய விசயத்தைத் தொடர்ந்து பேசுகிறார். ஆளுநர் மாளிகையை காலி செய்து விட்டு விரைவில் கமலாலயத்தை அவருடயை அலுவலகமாக மாற்றிவிடுவார் போல் தெரிகிறது. இதுபோன்ற ஆளுநரை தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை.
ஆவினை மேம்படுத்துவதற்கு புதிய அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஆவினில் சீர்கேடு நிலவி வருவதற்கு அதிமுக அரசே காரணமாகும். குஜராத் மாநிலத்தின் அமுல் மூலம் ஆவினை காலி செய்வதற்கும் உண்மையான வேர்களை அறுப்பதற்கும் பாஜக அமைச்சர் அமித்ஷா மூலம் சதித்திட்டம் நடக்கிறது. ஆவின் பிரச்சனைகளின் பின்னணியில் பாஜகவினருக்கு பங்கு உள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக அழிந்து வருகிறது. பாஜக அடிமைகளாகவே அதிமுகவினர் இருக்கிறார்கள். ராஜன் செல்லப்பா அவருடைய கட்சியின் நிலையை முதலில் விளக்க வேண்டும். கரையும் கப்பலாகவும் உடைந்த மண் பாத்திரமாகவும் அதிமுக உள்ளது. அதிமுகவின் இறுதிக்காலம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி சிந்திக்காமல் பிற கட்சிகளைப் பற்றி பேசுவதை ராஜன் செல்லப்பா நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.