அ.தி.மு.க அமைச்சர்களில் சிலர் காஸ்ட்லியானவர்கள். அந்த காஸ்ட்லியான ஒரு அமைச்சர் தான் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பலமாக இருந்தபோதே, செந்தில் பாலாஜிக்கு எதிராகக் காய் நகர்த்தி, கரூர் தொகுதியைக் கைப்பற்றி, கடந்த முறை செந்தில்பாலாஜி வகித்த அதே போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனவர்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
பிறகு செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, தினகரன் அணிக்குச் சென்று, இறுதியாக திமுகவில் இணைந்து மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பது தனிக்கதை.
வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு, அதிமுகவில் சில அமைச்சர்கள் முன்கூட்டியே தயாராகி, தங்களது தொகுதி வாக்காளர்களுக்கு இலவசங்களைக் கொடுக்க முடிவு செய்து விட்டார்கள். அந்தவரிசையில், முதல் நபராக தீபாவளிப் பண்டிகையையொட்டி, கரூர் தொகுதி வாக்காளர்கள் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு இனிப்பு மற்றும் காரம் அடங்கிய பாக்கெட்டுகளை, ஒரு பையில் போட்டு 'எம்.ஆர்.பி' டிரஸ்ட் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கி வருகிறார், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
இலவசப் பொருட்களளோடு, தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியிருக்கிறார். கரூர் தொகுதி மக்களின் வளர்ச்சிக்கும், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைப்பதற்கும், வாக்காளப் பெருமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனத் துண்டு பிரசுரங்களை அச்சடித்து வழங்கிவருகிறார். தீபாவளியையடுத்து வரும் தைப்பொங்கலை முன்னிட்டு, கரூர் பகுதி வாக்காளர்களுக்குப் பல பொருட்களை வாரி வழங்கத் திட்டமிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர் என்கிறார்கள் கரூர் பகுதி அதிமுகவினர்.