அவசர கதியில் குஜராத் பாலம் இடிந்த விபத்து குறித்துத் தீர்ப்பு சொல்வது இறந்த மக்கள் மீது கவலையில்லை என்பதை உணர்த்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேசுகையில், ''குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். நிறையப் பேர் காயமடைந்திருக்கிறார்கள். நிறையப் பேரைக் காணவில்லை. இது வரலாற்றில் மிகப்பெரிய கோர விபத்து. பிரதமர் கண்ணீர் வடிக்கிறார்; பேசும்போது அழுகிறார். அப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவத்திற்குத் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுகிறார்கள். அப்படிப்பட்ட விஷயத்தில் அரை மணி நேரத்தில் விசாரித்து ஏன் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
நியாயமாகப் பார்த்தால் உயர்மட்ட அளவில் ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு அல்லது உயர்மட்ட அளவில் ஒரு பெரிய விசாரணையை நடத்தி, விபத்திற்கான அடிப்படைக் காரணம் என்ன, அதை யார் கண்காணித்தார்கள், அதில் என்ன பலவீனம் இருந்தது என்பதை எல்லாம் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டுமே தவிர அவசர கோணத்தில் செய்வது அங்கு மக்கள் இறந்ததைப் பற்றி அரசு கவலைப்படவில்லை என்பதையே உணர்த்துகிறது. உண்மையிலேயே இறந்த மக்கள் மீது அனுதாபமோ, நல்லெண்ணமோ இருக்கும் பட்சத்தில் அதைத் தீர விசாரித்து முடிவு சொல்ல வேண்டும். இப்படி அவசர கோலத்தில் முடிவு சொல்லக்கூடாது'' என்றார்.