திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தொகுதியில் ஆறாவது முறையாக முன்னாள் அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார்.
கடந்த 16ஆம் தேதி ஆத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த ஐ.பெரியசாமி, தொடர்ந்து தொகுதிகளில் பிரச்சாரக் களத்தில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல் அவருக்கு ஆதரவாக அவருடைய மகள் இந்திரா, ஆத்தூர் தொகுதியிலுள்ள சின்னாளப்பட்டியில் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வாக்கு சேகரிப்பின்போது, “உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள், எனது தந்தையை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்” என்று கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியின் துண்டறிக்கையைக் கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும் வள்ளுவர் நகருக்குச் சென்ற இந்திராவுக்கு அப்பகுதியில் இருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து லட்சுமிபுரம், கோடங்கிப்பட்டி, ஆத்தூர் உட்பட பல பகுதிகளிலும் தந்தைக்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் தனது தந்தையின் வெற்றிக்காக இந்திரா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.