16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.
14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று நேற்றுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது பாஜகவின் காரியகர்த்தாவான ஜடேஜா எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை கூறியதாக தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டர் பதிவில், “கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா, ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர். பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.