Skip to main content

“மோடியின் உதட்டில் தமிழ், உள்ளத்தில் சமஸ்கிருதம்” - முத்தரசன் காட்டம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

cpi mutharasan talk about pm modi

 

பிரதமரின் மோடியின் உதடு தமிழைப் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் உள்ளம் சமஸ்கிருதத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமைப்புகளை பா.ஜ.க. அரசு தங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது. தற்போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்றமே பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது. ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினோம். அது தற்போது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால், மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது.

 

இந்தி, சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் தமிழைக் குறித்து புகழ்ந்து பேசிய மோடி தமிழ் மொழிக்கு எதுவும் செய்யவில்லை. மோடி அரசு பொறுப்பேற்று ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழுக்கு மிக மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது.

 

மோடியின் உதடு தமிழைப் புகழ்ந்து பேசுகிறது. ஆனால், உள்ளம் சமஸ்கிருதத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறது. மொழிகளை மட்டுமல்ல, அவர் மாநிலங்களையும் சமமாக நடத்தவில்லை. நடைமுறையில் அவர் குஜராத்துக்கு மட்டுமே பிரதமராக உள்ளார். மொழி விவகாரத்தில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக இருக்கிறார். 122 ஆண்டுகளில் பெய்யாத மழை மயிலாடுதுறை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மோடி அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால், குஜராத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மக்களுக்கு உதவுகிறார். மோடி தொடர்ந்து பொய்யை மட்டுமே பேசி வருகிறார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் கூறினார். ஆனால், தற்போது 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் அவ்வாறு செயல்படுகிறார்.

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல பிரச்சனைகள் உருவாகக் காரணமாகி வருகிறார். இந்தியா மதச்சார்பின்மை நாடு. ஆனால், ஆளுநர் இந்தியாவை இந்துக்களின் நாடு என்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதற்கு அவரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இந்து, சனாதனம் போன்றவற்றை பேசி வந்த அவர் தற்போது மார்க்ஸ் குறித்து பேசுகிறார். மார்க்ஸ் தத்துவத்தால் எந்த நாடும் சீரழியவில்லை. அந்தத் தத்துவத்தால் மாற்றங்கள் தான் நடந்துள்ளது. ஆனால், ஆளுநர் ரவி மார்க்ஸால் தான் நாடு சீரழிந்தது எனப் பேசத் தொடங்கியுள்ளார்.

 

மனுநீதியை உயர்த்திப் பிடிப்பது ஆர்.என்.ரவியின் கொள்கையாக இருக்கட்டும். அவர் ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பரப்பட்டும். மனுதர்மம் குறித்து வெளிப்படையாகப் பேச மறுக்கிறார். தங்கள் கொள்கையைப் பகிரங்கமாக பேச முடியாமல் அதை மூடி மறைத்து அமைப்பை நடத்துவது ஆர்.எஸ்.எஸ்.தான். அந்த அமைப்பின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மின்சார வாரியம் கைவிட வேண்டும். கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

 

சட்டப் பேரவையில் நிறைவேற்றும் தீர்மானம் மக்கள் நலன் சார்ந்தது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் ரத்து உட்பட சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. அதை அவர் உடனடியாக செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வது உள்நோக்கம் கொண்டது. மோடி ஆதரவோடு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என்பதற்கான அடையாளம் இது. காவல்துறையால் தேடப்படுபவர்கள் அடைக்கலம் அடையும் இடமாக பா.ஜ.க. இருக்கிறது. அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்படுகிறது. அந்தக் கட்சி வித்தியாசமான கட்சி.

 

அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க.வின் செயல்பாடுகளுக்கு தேர்தலில் மக்கள் பதில் தந்து விட்டனர். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றி விட்டது. பலவற்றை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் தி.மு.க. பலமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.