Skip to main content

எருமை மாடு ரூ.50 ஆயிரம், பசு மாடு 40 ஆயிரம், பன்றி 3 ஆயிரம்... ஆனால்... 

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி, 30-ந்தேதி என இரு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 19-ந் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு இடங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவிகளை ஏலம் விடும் சம்பவங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. வசதி படைத்தவர் குறிப்பிட்ட அளவுக்கு பணம் கொடுத்தால் அந்த பதவியை அவருக்கு கொடுக்கலாம் என்று ஏலம் விடுவதாக சொல்லப்படுகிறது.


 

இந்தநிலையில் தனக்கு வாக்களித்தால் ஒரு வாக்குக்கு தலா இவ்வளவு ரூபாய் தருகிறேன் என்று வேட்பாளர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதும், அதற்கு வாக்காளர் ஒருவர், தனக்கு பணம் வேண்டாம், அதற்கு பதில் ஒரு கழுதை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்பதும், அதற்கு வேட்பாளர், கழுதையின் விலை ரூபாய் 15 ஆயிரம் வரும், எல்லோரும் கழுதை, மாடு, ஆடு என கேட்டால் என்ன செய்வது என்பார். அப்போது வாக்காளர், கழுதையைவிட என்னோட வாக்கு மட்டமா போச்சா என்று கேட்டு, வேட்பாளரை விரட்டியடிப்பது போன்று வாட்ஸ் அப்புகளில் வீடியோ பரவியது.
 

அந்த வீடியோவை மையப்படுத்தி, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை விமர்சித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் அருகே பல்வேறு இடங்களில் கரைப்புதூர் மக்கள் மன்றம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. கரைப்புதூர் ஊராட்சியில் உள்ள கரைப்புதூர், பாச்சங்காட்டு பாளையம், அருள்புரம் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. 

 

Poster



அந்த சுவரொட்டியில் ‘பன்றி விலையை விட, ஓட்டுக்கு விலை குறைவு’  தேர்தலில் வாக்குகளை விற்போர் மற்றும் வாங்குவோர் கவனத்திற்கு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் எருமை மாடு 50 ஆயிரம் ரூபாய், பசு மாடு 40 ஆயிரம் ரூபாய், ஆடு 10 ஆயிரம் ரூபாய், நாய் 25 ஆயிரம் ரூபாய், பன்றி 3 ஆயிரம் ரூபாய். ஆனால், தேர்தலில் மக்களின் விலை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை உள்ளது. இது பன்றியின் விலையை விடக்குறைவு. சிந்தித்து பணம் பெறாமல், தன்மானத்துடன் வாக்களியுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
 

இந்த சுவரொட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த சுவரொட்டிகள் வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது. மேலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்