போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
மேலும், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு இன்று (16.02.2024) தேதி குறிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அப்போது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை, அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டு பதிவைத் தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று (20-02-24) நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.