கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, பொதுமக்களை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சந்தித்துப் பேசினார். அதற்கு பின்னர் அம்மன் குளம் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் காணொளி காட்சி மூலம் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது வானதி சீனிவாசனின் அருகில் பணம் எண்ணும் கவுண்டிங் மெஷின் இருந்தது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. ஏற்கனவே, தனது அலுவலகத்தைத் திறந்து வைத்தபோது, ‘தன லாபம்’ என எழுதியிருந்தது சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “ரேஸ்கோர்ஸ் பகுதியில் மக்களைச் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தால், நண்பரின் அலுவலகத்தில் காணொளி கூட்டத்தில் கலந்துகொண்டேன். அது எனது அலுவலகம் அல்ல. கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்குத் தெரியாது. அதற்குள் சிலர் கற்பனை சிறகுகளை விரிக்கின்றனர்” என பதிவிட்டுள்ளார்.