Skip to main content

கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்! திருமாவளவன்

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
corona


மாவட்ட மருத்துவமனைகளில் கரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சுகாதாரத்துறை அமைச்சர் இதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும் அதை குறைத்து காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பதுகுறித்து  சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

கரோனா பேரிடர் முழுஅடைப்பு காலத்தை மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நோயை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதனால் உலக அளவில் இந்தியா 6-ஆம் இடத்துக்கு வந்துவிட்டது. இந்தியாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. இந்நிலையில் எல்லா கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து தமிழக அரசு தளர்த்தி வருகிறது. இதனால் நோய் பரவல் வெகு வேகமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

 

 


சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் எந்த எச்சரிக்கையையும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் இன்னும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்களென்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்னையில் அரசு மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்படவில்லை என்ற புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள் கரோனா சோதனை செய்துவிட்டு வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று நோயாளிகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

 

 

tt


மக்களுடைய அழுத்தத்தினாலும், எதிர்கட்சிகளின் விமர்சனங்களின் காரணமாகவும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் இப்பொழுது தமிழக அரசால் வரன்முறை படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் தனியார் மருத்துவமனைகள் யார் அதிகம் பணம் கொடுப்பார்களோ அவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளுகின்ற அணுகுமுறையைக் கடைபிடித்து வருகின்றன என்று கூறப்படுகிறது. 

கரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் அதனால் உயிரிழப்பு என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதே அரசு சார்பில் சொல்லப்படும் சமாதானமாக இருக்கிறது. இதனால் மக்களும் பயத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர்.
 

nakkheeran app



மேற்கொள்ள வேண்டிய எந்த முன்னெச்சரிக்கையையும், கட்டுப்பாடுகளையும் மக்கள் மேற்கொள்ளாமல் போவதற்கு அரசே பொறுப்பாகும். உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தை மெய்பிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் கரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

அது உண்மையாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள்படும். எனவே இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் விழிப்போடு இருந்து மருத்துவமனைகளில் அவ்வாறு இறப்புகளை மறைக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.