இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக குறைந்துவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக சென்னையில் சில தினங்களாக அரசு தலைமை மருத்துவமனையில் தொற்று பாதித்தவர்களுக்கு உடனடியாக படுக்கை கிடைக்காமல், காத்திருந்து படுக்கைகளைப் பெற வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக முழு ஊரடங்கு பார்க்கப்படுகிறது. ஆனால், அதேவேளையில் கோவையில் தற்போது தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது.
இந்நிலையில், முழு ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகளும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் வருமானமின்றி தவிப்பதாகவும் அவர்களுக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மாற்றுத் திறனாளிகளும், அமைப்பு சாராத் தொழிலாளர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் கடந்த 10ஆம் தேதிமுதல் ஊரடங்கும், 17ஆம் தேதிமுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. ஆனால், அதற்கு முன்பாகவே கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதிமுதல் முடி திருத்தகங்கள் மூடப்பட்டன. அப்போது முதலே பல வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர். தமிழ்நாட்டில் முழுமையான ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த வாக்குறுதியின்படி வழங்கப்பட வேண்டிய ரூ. 4,000 நிதியுதவியில் முதற்கட்டமாக ரூ. 2,000 வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 2,000 ஜூன் மாதத் தொடக்கத்தில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால், மாற்றுத்திறனாளிகள், அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் வழங்கப்படும் நிதியுதவியையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு நிதியுதவியையும் ஒப்பிட முடியாது; ஒப்பிடவும் கூடாது. தமிழக அரசால் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ரூ. 2000 உதவியை வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு வேறு ஆதாரங்களில் இருந்து சிறிதளவேனும் வருவாய் இருக்கும் என்பதால், அவர்களின் இன்றியமையாத குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தமிழக அரசால் வழங்கப்படும் ரூ. 2,000 நிதியுதவி ஓரளவு உதவியாக இருக்கும்.
ஆனால், முடித்திருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், தானி மற்றும் மகிழுந்து ஓட்டுனர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், நடைபாதை வணிகர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்துவிட்டனர். தமிழக அரசு வழங்கிய ரூ. 2000 நிதியுதவி அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானது அல்ல. அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை இதுவென்றால், மாற்றுத்திறனாளிகளின் நிலை இன்னும் மோசம். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத் தேவைகளும், மருத்துவம் சார்ந்த செலவுகள் உள்ளிட்ட செலவுகளும் அதிகம். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் நிதியுதவி மாற்றுத்திறனாளிகளில் பெரும்பான்மையினருக்கு கிடைக்காது என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.
முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து வகையான அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு இரு தவணைகளில் தலா ரூ. 1000 வீதம் மொத்தம் ரூ. 2,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கும் தலா ரூ. 1000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, பெருந்தொற்று காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு வாரம் ரூ. 1,000 வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.