கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் கூடலூர் மர வியாபாரி சஜீவனுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில வர்த்தக அணி பொறுப்பை சஜீவனுக்கு வழங்கியது அக்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுக கட்சியிலிருந்து அதிமுகவில் இணைந்த புதிய நிர்வாகிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என அதிமுகவின் அம்மா பாசறை மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் விமல் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆகியோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் இணையக்கூடிய கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.